ADVERTISEMENT

அதிமுக வசமிருந்து திமுக வசம் வந்த வணிக வளாகக் கடைகள்!! 

07:26 PM Feb 23, 2020 | kalaimohan

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செம்பட்டியில் உள்ளது. திண்டுக்கல்-தேனி நெடுஞ்சாலை ஓரம் அலுவலகம் இருப்பதால், அலுவலகம் முன்பு ஊராட்சி ஒன்றிய நிதியை பெருக்குவதற்காக கடந்த முறை பதவி வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் வணிக வளாகத்திற்கு ஏற்பாடு செய்து, வளாகத்தை கட்டினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தரை தளத்தில் 10 கடைகளும், முதல் தளத்தில் 10 கடைகளும் சேர்த்து மொத்தம் 20 கடைகள் கட்டப்பட்டன. கடந்த 01.03.2016 அன்று ஏலம் விடப்பட்டு, அன்று முதல் 28.02.2019 வரை 3 வருடத்திற்கு ஏலம் விடப்பட்டது. அதிமுக மாவட்ட மீனவரணி இணைச் செயலாளர் வக்கம்பட்டி அந்தோணிக்கு முதல் கடையும், 3ம் நம்பர் கடையை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பி.வி.நடராஜனும், 5ம் நம்பர் கடையை ஆத்தூர் ஒன்றிய செயலாளர் பி.கே.நடராஜனும், 6ம் நம்பர் கடையை சித்தையன்கோட்டை நகர அதிமுக அவைத்தலைவர் மகன் ஏ.விஜயகுமாரும், 8ம் நம்பர் கடையை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மல்லையாபுரம் கிருஷ்ணன் மனைவி லீலாவதியும், 12ம் நம்பர் கடையை பித்தளைப்பட்டி பாலுவும், 13ம் நம்பர் கடையை பாறைப்பட்டி குணசேகரன் மனைவி ஜி.ருக்மணி உட்பட அதிமுகவினர் கடைகளை ஏலம் எடுத்திருந்தனர்.

கடந்த வருடம் தனி அலுவலர் மூலம் ஒரு வருடத்திற்கு ஏலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் 30.11.2019 அன்று ஏலம் முடிவடைந்த நிலையில் புதிதாக வந்த ஒன்றியக்குழு நிர்வாகம் வணிக வளாக கடைகளை ஏலம் நடத்த முடிவு செய்தது. அதன் படி 21.02.2020 அன்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மாடியில் ஒன்றிய ஆணையாளர் சீத்தாராமன் தலைமையில் ஏலம் விடப்பட்டது. புதிய நிர்வாகம் முழுக்க முழுக்க திமுக வசம் இருந்ததால் அதிமுகவினர் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. முறையாக தினசரி நாளிதழ்களில் ஏலம் சம்மந்தமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஏலம் நடந்ததால் திண்டுக்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த தகுதியுள்ள நபர்கள் 28 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

ஏலம் நடைபெறும் இடத்தில் ஏலத்தை நடத்தவிடாமல் கடைகளை உள்வாடகைக்கு எடுத்தவர்கள் தகராறு செய்ய திட்டமிட்டுள்ளதை தெரிந்து கொண்ட அதிகாரிகள், முறையாக வரைவோலை எடுத்தவர்கள் மட்டும் அனுமதித்தனர். இதனால் ஏலம் அமைதியாக நடைபெற்றது. ஏலத்தின் போது கடைகள் ஒன்றுக்கு வாடகையில் 15 சதவீதம் கூடுதலாக வைத்து ஏலம் விடப்பட்டது.

இதுகுறித்து ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் எம்.மகேஸ்வரி முருகேசன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் கூறுகையில், கடந்த முறையை பின்பற்றிதான் இம்முறையும் ஏலம் விட்டுள்ளோம். கடந்த முறையைவிட இம்முறை கடை ஒன்றுக்கு 15 சதவீதம் கூடுதலாக வைத்துதான் ஏலம் விட்டுள்ளோம். இதன் மூலம் வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை அதிக வருவாய் கிடைக்கும் என்றார். கடந்த முறை ஏலம் எடுத்தவர்கள் உள்வாடகைக்கு கடைகளை விட்டிருந்ததால் அவர்களை சரிக்கட்ட முடியாமல் முன்பு ஏலம் எடுத்தவர்கள் பிரச்சனையை தூண்டி விடுகிறார்கள் என்றார். ஆட்சி முடிந்தவுடன் காட்சி மாறும் என்பது போல் கடந்த முறை வணிக வளாகம் முழுவதும் அதிமுக வசம் இருந்தது. இம்முறை திமுக வசம் வந்துவிட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT