ADVERTISEMENT

கோவையில் அதிர்ச்சி; நாட்டு மருந்து கடைக்காரரிடம் இருந்த புலித்தோல்! 

12:13 PM Jul 25, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை மாவட்டம், கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பிராஜ் (52). இவர் அந்தப் பகுதியில் நாட்டு மருந்துக் கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இவரது வீட்டில் புலித்தோல் ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் வனத்துறையினர் சின்னதம்பி ராஜ் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது சின்னதம்பி ராஜ் வீட்டில் புலித்தோல் கண்டறியப்பட்டது. இதையடுத்து, புலித்தோலை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து சின்னதம்பிராஜின் நாட்டு மருந்துக் கடையிலும் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், கடையில் மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மண்ணுளிப் பாம்பு மற்றும் இறந்து போன மண்ணுளிப் பாம்பு ஒன்றையும் வனத்துறையினர் கைப்பற்றினர்.

அதன் அடிப்படையில், சின்னதம்பிராஜ் மீது வன உயிரினக் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சின்னதம்பிராஜிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், சின்னதம்பிராஜுக்கு முன்பு அவரது தந்தை சின்னச்சாமி தான் அந்த நாட்டு மருந்துக் கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சின்னதம்பிராஜ் நாட்டு மருந்துக்கான இலை, செடிகளை எடுக்க அருகே இருக்கும் தடாகம் பகுதியில் உள்ள வனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த வனத்தில் சில மண்ணுளிப் பாம்பு அவருக்குக் கிடைத்துள்ளது. அந்தப் பாம்பை வைத்து அவரது தந்தை சொல்லிக் கொடுத்த கேன்சர் நோயைக் குணமாக்கும் கசாய மருந்து தயாரிக்க முயன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

சின்னதம்பிராஜ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட புலித்தோலை ஆய்வு செய்வதற்காக வனத்துறை அதிகாரிகள் அதனைச் சென்னையில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், அவரது வீட்டில் ஒற்றைத் தலை வலியைப் போக்குவதற்கு மருந்து தயாரிக்க வைத்திருந்த மான்கொம்பையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் புலித்தோல் எப்படி வந்தது என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT