ADVERTISEMENT

அப்போலோவில் அறுவை சிகிச்சையின் போதே ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் அத்துமீறல்... லேப் டெச்னீசியன் கைது!!

08:36 AM Jun 14, 2019 | kalaimohan

பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் கால் மூட்டில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள இணையதளத்தில் சிறந்த மருத்துவமனை குறித்து தேடியுள்ளார். அப்போது சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பாக இருப்பதாக இணையத்தில் இருந்த தகவலின் அடிப்படையில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை பெருங்குடி அப்போலோவில் கடந்த 4ம் தேதி சிகிச்சைக்காக சேர்ந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த ஆறாம் தேதி அந்தப் பெண்ணுக்கு இடுப்புக்குக் கீழ் உணர்விழக்கச் செய்யும் மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. அப்பொழுது அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையை அந்த பெண் பார்க்கக் கூடாது என்பதற்காக இடுப்புக்கு மேல் குறுக்காக திரைசீலை போட்டு வைத்திருந்தனர். ஒருபக்கம் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்க மறுபக்கம் அந்த பெண்ணின் தலைப் பக்கத்தில் நின்றிருந்த லேப் டெக்னீசியன் டெல்லி பாபு என்பவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.

முகத்தில் செயற்கை சுவாசக் கருவி மாற்றப்பட்டு இருந்ததால் அந்த பெண்ணால் சத்தமிட இயலவில்லை என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்து செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டதும் அங்கிருந்த மருத்துவர்களிடம் லேப் டெக்னீசியன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்த மருத்துவர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அப்போலோ நிர்வாகத்தில் இது தொடர்பாக அந்தப் பெண் புகார் தெரிவித்தபோதும் நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைத்தனர்.

இதனால் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்திருந்தார் அந்தப் பெண். காவல்துறையினர் விசாரணைக்கு சென்றபோது அந்தப் பெண் மனநிலை பாதிப்புக்கு சிகிச்சைக்கு வந்தவர் எனக்கூறி போலீசாரை திருப்பி அனுப்பியது அப்போலோ நிர்வாகம். ஆனால் அந்தப் பெண் காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்வரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக மாட்டேன் என்று போராட்டம் நடத்தினார். அதனால் தங்களுக்கு வேண்டப்பட்ட இரு போக்குவரத்து போலீசாரை கொண்டு விசாரிப்பது போல நாடகத்தை நடத்தியது அப்போலோ நிர்வாகம். இதுகுறித்து மீண்டும் காவல் ஆணையருக்கு அந்தப் பெண் ஆன்லைனில் புகார் அளித்ததால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து விசாரிக்க சென்ற துரைப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளரிடம் அந்த பெண்ணுக்கு மனநிலை சரியில்லை அதனால்தான் சிகிச்சை அளித்து வருகிறோம் என்ற அடிப்படையில் பேசி சமாளித்து உள்ளனர்.

அதனை ஏற்காத காவல் உதவி ஆய்வாளர் அந்த பெண்ணின் மருத்துவ அறிக்கையை வாங்கி பார்த்தார். அப்போது அந்த அறிக்கையில் அந்த பெண் கால் மூட்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த பெண்ணை நேரடியாக சந்தித்து விசாரித்தபோது லேப் டெக்னீசியன் தன்னிடம் அருவெறுக்கத்தக்க வகையில் நடந்ததாக கதறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை அறிக்கை காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் உடனடியாக மருத்துவமனை ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 6 நாட்கள் கடந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் டெல்லிபாபுவை மருத்துவமனையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை மருத்துவமனையை விட்டு செல்வதில்லை என்று அந்த ஐடி பெண் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை ஒருபுறம் நடக்க மறுபுறம் பாலியல் வன்கொடுமை நேர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும்,சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT