ADVERTISEMENT

மீண்டும் வந்த 'உடைந்த கொம்பன்' - சேரம்பாடியில் களமிறங்கிய கும்கி சகோதரர்கள்!! 

03:34 PM Feb 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரே வாரத்தில், 3 பேர் 'உடைந்த கொம்பு சங்கர்' என்ற ஒற்றைக் காட்டு யானையால் அடித்துக் கொல்லப்பட்டனர். தந்தையும் மகனும் உடைந்த கொம்பு சங்கரால் கொல்லப்பட்ட நிலையில், அந்த யானையைப் பிடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததை அடுத்து, அதனைப் பிடிக்க வனத்துறை சார்பில் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சேரம்பாடியில் மறைந்திருந்த உடைந்த கொம்பு சங்கரைப் பிடிக்க தொடர் முயற்சி செய்தும் முடியாமால் போன நிலையில், வனத்துறையினரின் கண்ணில் இருந்து தப்பிய உடைந்த கொம்பன் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால், யானையை முதல்முறையாக ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர். அப்போது உடைந்த கொம்பனைச் சுற்றி 10 யானைகள் இருந்தன. உடைந்த கொம்பனைக் கண்காணிக்க கோவை முதுமலையிலிருந்து ட்ரோன் கேமராக்கள் கொண்டுவரப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், பிடிக்க முடியாமல் போனது. பின்னர் இறுதியாக யானையைப் பிடிப்பதற்கான வனத்துறையின் திட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கேரள வனப்பகுதிக்கு தப்பிச் சென்ற உடைந்த கொம்பன், ஒன்றரை மாதத்திற்குப் பிறகு கடந்த நான்காம் தேதி அதே நீலகிரி சேரம்பாடி பகுதிக்கு வந்துள்ளது. மூன்று பேரைக் கொன்ற யானை மீண்டும் திரும்பியதால் சேரம்பாடி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் வந்த உடைந்த கொம்பனைப் பிடித்து தெப்பக்காடு முகாமுக்கு அனுப்ப வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக கொம்பனைப் பிடிக்க தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து இரட்டை சகோதரர்களான விஜய், சுஜய் என்ற கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தெப்பக்காடு யானைகள் முகாமில் 1971ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த சகோதர யானைகள், கும்கி யானையாக மாற்றப்பட்டு காட்டுயானைகளைப் பிடிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த இரு யானைகளும் இதுவரை ஒன்றாக சேர்ந்து காட்டு யானைகளைப் பிடிக்க பயன்படுத்தப்பட்டதில்லை. இந்நிலையில் ஒன்று சேர்ந்து சேரம்பாடியில் களமிறங்கியுள்ளனர் இந்த கும்கி இரட்டையர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT