ADVERTISEMENT

முன் ஜாமின் கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல்!

12:10 AM Feb 01, 2020 | santhoshb@nakk…

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முறைகேடு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் முன் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி வருவதாகக் கூறி ரூ.2 கோடியே 80 லட்சம் முறைகேடு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், அருண்குமார் என்பவர் அளித்த புகாரில் செந்தில் பாலாஜி ஏற்கனவே முன் ஜாமின் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT


இந்நிலையில், இன்று (31/01/2020) சென்னை மற்றும் கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்திய குற்றபிரிவு காவல் துறையினர், அவருடைய மந்தைவெளி இல்லத்திற்கு சீல் வைத்தனர். இந்த வழக்கில் தான் கைதாகக்கூடும் என்பதால், முன் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் தன்னுடைய பெயர் இல்லை என்றும் அரசியல் விரோதம் காரணமாக தன் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, 2017-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி, எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த 2019- ஆம் ஆண்டு இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தனக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்தகட்டமாகத் தன்னை கைது செய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி சேஷசாயி முன் முறையிடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, முன் ஜாமின் வழக்கை பிப்ரவரி 3-ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT