/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ch3_49.jpg)
சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்ததை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புதுச்சேரி பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க, சட்டப்பேரவை தலைவர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பாகூர் தொகுதியில், கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தனவேலு வெற்றி பெற்றார். பாகூர் சட்டமன்றத் தொகுதியில், அரசு சார்பில் வளர்ச்சிப் பணிகள் சரிவர நடைபெறுவதில்லை என்று ஆளும்கட்சியான காங்கிரசுக்கு எதிராக அவர், தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வந்தார்.
ஆளுங்கட்சியில் இருந்துகொண்டே அரசை விமர்சித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அப்போதைய தலைவராக இருந்த அமைச்சர் நமச்சிவாயத்திடம் புகார் அளித்தனர். அதன்படி, ஜனவரி 19- ஆம் தேதி தனவேலு எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஜனவரி 29- ஆம் தேதி கவர்னரைச் சந்தித்த தனவேலு எம்.எல்.ஏ., முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை வழங்கினார். இதைத்தொடர்ந்து, தனவேலுவை தகுதி நீக்கம் செய்து (எம்.எல்.ஏ. பதவி பறிப்பு) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அரசு கொறடாவான அனந்தராமன் எம்.எல்.ஏ.ஜனவரி 30- ஆம் தேதி மனு கொடுத்தார். இந்நிலையில், ஜூலை 10- ஆம் தேதி தனவேலுவின் பதவியைப் பறித்து, சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.
பதவி பறிப்பு உத்தரவை ரத்து செய்யக்கோரி, தனவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, செய்திகள் மற்றும் டி.வி.டி. அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் தனவேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டதால், மேற்கொண்டு இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கத் தேவையில்லை என விளக்கமளித்தார்.
இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01.gif)