போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் பிப்ரவரி 14-ம் தேதி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த 2011 முதல் 2015- ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை பெற்றுத் தருவதாகக்கூறி ரூ.2 கோடியே 80 லட்சம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

dmk mla senthil balaji cbcid case chennai high court

இந்த வழக்கில், செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு பலவேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, தன்னைக் காவல் துறையினர் கைது செய்யக்கூடும் எனக் கருதி, செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Advertisment

இந்த மனு மீதான விசாரணையின் போது, குற்றவிசாரணை முறைச்சட்டம் 41 ஏ பிரிவின் கீழ் விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் ஏதும் அனுப்பப்படவில்லை என அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில்பாலாஜிக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.

dmk mla senthil balaji cbcid case chennai high court

இந்நிலையில், நீதிபதி ஆதிகேசவலு முன் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அளித்த நாளில், முன் ஜாமின் வழங்கியதால் எந்த பயனும் இல்லை என்பதால், முன் ஜாமின் வழங்கிய உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என முறையிட்டார். இதை ஏற்று, ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் அடிப்படையில், வரும் 14-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்ட நீதிபதி, காவல்துறை சார்பில் முன் ஜாமின் உத்தரவில் திருத்த மனு தாக்கல் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டார்.