ADVERTISEMENT

களையெடுக்க கலெக்டர் அலுவலக ஊழியர்களை அனுப்புங்க! - ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயி

07:54 PM May 01, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் நடைபெறுவது வழக்கம். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடந்த வாரம் நடத்திய மனுநாளில், சிவகிரி வட்டம், நெல்கட்டும்செவல் கிராமத்திலிருந்து மகேஸ்வரன் என்ற விவசாயி அளித்த மனுவும் கோரிக்கையும் மிகவும் மாறுபட்டதாக உள்ளது.

ஏன் விவசாயியாகப் பிறந்தோம் என்று வெந்து நொந்து போயிருக்கும் பாவப்பட்ட விவசாயி என அந்த மனுவில் தன்னைக் குறிப்பிட்டுள்ள மகேஸ்வரன், விவசாய கூலி வேலைக்கு ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறைக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த மனுவில் ‘நான் சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் பிப்ரவரி - ஜூனில் கோடைக்காலப் பருவத்திலும், செப்டம்பர்-ஜனவரியில் மழைக்காலத்திலும் பயிர் செய்து வருகிறோம். இரு பருவத்திலும் பயிரின் வயதுக்கு ஏற்ப, முதல் 50 நாட்கள் வரை களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கும், கடைசி 30 நாட்கள் வரை அறுவடைக்கும் கூலி ஆட்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். ஆனால், ஒவ்வொரு வருடமும் பயிர் பராமரிப்பு நேரத்திலும் அறுவடை நேரத்திலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) எனப்படும் 100 நாட்கள் வேலைக்கு கிராம மக்கள் அனைவரும் சென்றுவிடுகின்றனர்.

அதனால், பயிரின் முக்கிய பிரச்சனையான களையெடுப்பிற்கு ஆட்கள் கிடைக்காமல், சில வருடங்களாக நாங்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறோம். அப்படியே ஆட்கள் கிடைத்தாலும், 7 மணி நேர வேலை என்பது 100 நாள் வேலை காரணமாக, 4 மணி நேரமாகச் சுருங்கிவிட்டது. எனவே, பயிர் பராமரிப்புச் செலவு மேலும் அதிகமாகி விட்டது. விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளோம். நான் சுமார் 3 ஏக்கர் பரப்பில் தற்போது பருத்தி பயிர் செய்துள்ளேன். எங்கள் பகுதியில் தற்போது MGNREGS திட்ட வேலை நடைபெறுவதால் களையெடுப்பதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை.

ஆகவே, தங்கள் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் எவரேனும் இருப்பின், அவர்களை எனது நிலத்தில் களை எடுப்பதற்கு DEPUTATIONல் அனுப்பி வைத்து உதவ தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு அவர்களை அனுப்பி வைக்கும் பட்சத்தில், அவர்களுக்கான கூலி, பஞ்சப்படி(D.A), பயணப்படி (T.A), மதிய உணவு என அனைத்தும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன். இத்துடன் எனது நிலத்தின் புகைப்பட நகலை இணைத்துள்ளேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் விவசாயி மகேஸ்வரனை தொடர்புகொண்டோம். “குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் அந்த மனுவைக் கொடுத்தேன். மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து நியாயமான பதில் வரும்; விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.” என்றார்.

100 நாள் வேலைத் திட்டம், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. பொருளாதாரத்தை உயர்த்தி, வறுமையை அகற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது ஆறுதலான விஷயமே. அதே நேரத்தில், விவசாயக் கூலி வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல், இயந்திரப் பயன்பாடு அதிகரிப்பதற்கும், விவசாயமே பண்ண வேண்டாமென்று பலர் வெளியேறுவதற்கும், விளைநிலங்கள் தரிசாக மாறுவதற்கும், 100 நாள் வேலைத்திட்டம் காரணமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இத்திட்டத்தில் விவசாயத்தை முழுமையாகச் சேர்த்து, கூலியை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

ஆட்சியர் அலுவலக ஊழியர்களை விவசாய நிலத்தில் களையெடுப்பதற்கு DEPUTATIONல் அனுப்பும்படி ஆட்சியரிடமே மகேஸ்வரன் மனு அளித்தது, குசும்பு அல்ல! விவசாயிகளின் வேதனையும் வலியும்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT