Skip to main content

"என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நஷ்டஈடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்" - மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி பேட்டி!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

cuddalore district nlc plant farmers district collector inspection

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கொம்பாடிகுப்பம், ஊத்தங்கால், பொன்னாலகரம் மற்றும் கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சுற்றி, என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் மணல்மேடு அமைந்துள்ளது. இம்மணல் மேடுகளில் இருந்து மழைக் காலங்களில் ஏற்படும் மண்சரிவினால், சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களின் வயல்களில், முற்றிலுமாக மணல் சூழ்ந்து விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது.

 

இதுகுறித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரியிடம் அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்தனர். அதையடுத்து, பொன்னாலகரம் கிராமத்தில் அமைந்துள்ள என்.எல்.சி மணல்மேட்டில் இருந்து வெளிவரும் மழைநீர் செல்லும் வடிகால் வாய்க்கால் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தவர், அதற்கான தீர்வுகள் குறித்து என்.எல்.சி அதிகாரிகளிடம் உரையாற்றினார்.

 

cuddalore district nlc plant farmers district collector inspection

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, "என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மணல் மேட்டில் இருந்து, ஏற்படும் மண் சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தாசில்தார், சார் ஆட்சியர் தலைமையில் தற்போது வரை 8 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

 

அதன் அடிப்படையில், கடந்த நான்கு வருடமாக என்.எல்.சி இந்தியா நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கான, நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மணல் மேட்டில் இருந்து வெளிவரும் மழைநீரை விவசாயம் செல்லும் பகுதிக்குச் செல்லவிடமால், தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கம்மாபுரம் பகுதியில் ஏற்படும் மண் சரிவினால், மணல் மேட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர், எவ்விதத் தடங்களின்றி செல்வதற்கான வழிகளைச் சரி செய்துள்ளனர். அடைப்பு ஏற்பட்டாலோ? வாய்க்கால் உடைபட்டாலோ? உடனடியாக நிவர்த்தி செய்வதற்காக ஜே.சி.பி இயந்திரம், மணல் மூட்டைகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.