ADVERTISEMENT

“ரிஸ்க் எடுத்தேன்... ரஸ்க் ஆகிவிட்டேன்” - செல்லூர் ராஜு கலகலப்பு

04:36 PM Sep 21, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்றும் முன்தினம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, “நாம் அனைவரும் பிறப்பதற்கு முன்பாக இந்த நாட்டில் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தெருவில் நடந்தால் தீட்டு என்ற நிலை தான் இங்கு இருந்தது. அந்த நிலையை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போராடி மாற்றினார்கள். மேடையில் பேசி பேசி வளர்ந்த கட்சி தான் திமுக. ஆனால், இன்றைக்கு அண்ணாவை பற்றியும், பெரியாரை பற்றியும் ஒருவர் தவறாக பேசுகிறார். அதற்கு திமுக சார்பில் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அண்ணாவை பற்றி இழிவாக பேசுபவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தால் அமலாக்கத்துறை வந்துவிடும் என்ற பயத்தில் தி.மு.க.வினர் இருக்கிறார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாகத் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு சம்பவத்தின் மூலம் நான் உலகம் முழுவதும் பிரபலமாகிட்டேன். இன்றைய சூழ்நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ‘அரசியல் விஞ்ஞானி’ என்று என்னை கேலி கிண்டல் செய்கின்றனர். அந்த கதையை இப்போது சொல்ல விரும்புகிறேன்.

மதுரை மாவட்டத்தில் அப்போது வறட்சி நிலவியதால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வறட்சி நிவாரண கூட்டம் அப்போதைய ஆட்சியர் வீரராகராவ் முன்னிலையில் நடைபெற்றது. அந்த சமயம் சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரை வைகை ஆற்றில் 15 லட்சம் மக்கள் கூடும் நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளிடம் ஆலோசித்தேன்.

அப்போது வைகை அணையில் தண்ணீர் குறைவாக இருந்தது. இருக்கும் தண்ணீரை வைத்து 4 அல்லது 5 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீரை வழங்க முடியும். அதற்குள் மழை வந்துவிடும், பிறகு நிலைமையை சமாளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், எதிர்பார்த்த மழை வரவில்லை. இந்த நிலையில் தான் 4 நாள்கள் கழித்து ஆட்சியர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார். அதில் அவர், ‘நாம் வைகை ஆற்றுக்கு செல்ல வேண்டும். அங்கே முதன்மை பொறியாளர் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். அதன்மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம். அதன் மூலம் வைகை அணையில் நீரை ஓரளவு சேமிக்கலாம்’ என்று கூறினார்.

நானும் கட்சி நிர்வாகிகளுடன் வைகை அணைக்கு சென்றேன். அங்கு, ஏற்கனவே தெர்மாகோல் அட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து தயாராக இருந்தனர். அப்போது நானும், அங்கு வைக்கப்பட்டிருந்த தெர்மாகோல் அட்டைகளை எடுத்து வைகை அணை தண்ணீரில் வைத்தேன். வைத்தது தான் தாமதம். அந்த நேரத்தில் வீசிய காற்றின் வேகத்தில் தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் பறந்தன. இந்த செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை ‘அரசியல் விஞ்ஞானி’ என்று இணையவாசிகளால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று ரிஸ்க் எடுத்தேன். ஆனால் இப்படி ரஸ்க் ஆகிவிட்டேன்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT