Skip to main content

“அண்ணா பேசியதைப் பேச செல்லூர் ராஜுக்குத் தைரியம் இருக்கிறதா?” - உதயநிதி ஸ்டாலின்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Udayanidhi Stalin said Does Sellur Raju have the guts to say what Anna said

 

இந்தியாவில் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வரும் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் தமிழகத்தில் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே  வார்த்தைப் போர் நிலவி வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களான ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எனப் பலரையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு, அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறிப் பேசுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். 

 

இதனையடுத்து, சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்தும் அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா பேசிய சனாதனத்தைப் பேச செல்லூர் ராஜுக்கு தைரியம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கட்சி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று (20-09-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சரும், மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

 

அதில் அவர், “மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லூர் ராஜு நேற்று ஒரு கூட்டத்தில், பா.ஜ.கவினர் பெரியார் பற்றியும் அண்ணாவைப் பற்றித் தவறாகப் பேசி வருகின்றனர். ஆனால் திமுக அதற்கு குரல் கொடுக்கவில்லை என்று கூறுகிறார். ஆனால், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அண்ணாவைப் பற்றித் தவறாகப் பேசிய அண்ணாமலைக்கு முதல் நாளே கண்டனம் தெரிவித்துவிட்டார். சில பேருக்குத்தான் நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆனால், சில பேரையெல்லாம் நாம் உதாசீனப்படுத்தி போகத்தான் வேண்டும். சனாதன மாநாட்டில் நான் பேசியதை திரித்து மோடி முதல் அமித்ஷா வரை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பொய் செய்தியை பரப்பி பேசினார்கள். ஆனால்,  சனாதனம் குறித்து அதிமுகவினர் யாரும் பேசவில்லை.

 

அண்ணாவைப் பற்றிப் பேசியதற்கு அதிமுகவினருக்கு கோபம் வருகிறது. ஆனால், சனாதனத்தை பற்றி அண்ணா என்ன பேசினார் என்று அதிமுகவினருக்கு தெரியுமா? அதைப் பற்றிப் பேசுவதற்கு அவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா? அண்ணா பேசிய அத்தனை கருத்துகளையும், உரிமைகளையும் இன்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ‘சனாதனம் என்னும் சேற்றில் நம் மக்கள் இன்னும் வெளியேறாதது வருத்தமளிக்கிறது. இன்னும் சிலர், அந்த சேற்றை சந்தனம் என்று நினைக்கின்றார்கள். அதனை நினைத்து வெட்கமும், வேதனையும் படுகிறேன்’  என்று அண்ணா கூறியிருக்கிறார். அண்ணா கூறிய இந்த வார்த்தையை சொல்வதற்கு செல்லூர் ராஜுக்கு தைரியம் இருக்கிறதா?” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்