ADVERTISEMENT

“யாரை காப்பாற்ற இந்தக் கைது?” - பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் கைதுக்கு சீமான் கண்டனம் 

03:19 PM Sep 11, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிவந்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறியதால், அப்பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்கபட்ட நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்துவருகின்றனர். வழக்கு விசாரணையில் இருப்பதால் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசவோ, எழுதவோ கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிவந்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனை காவல்துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர். சென்னையில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது கள்ளக்குறிச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாவித்ரி கண்ணன் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக மூத்த பத்திரிகையாளர் ஐயா சாவித்திரி கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை சனநாயக உரிமையான கருத்துச்சுதந்திரத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள இக்கைது நடவடிக்கை, கடும் கண்டனத்திற்குரியது.


இதுவரை இல்லாத நடைமுறையாக வழக்கு குறித்து புலனாய்வுசெய்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரைக் கைதுசெய்வதும், அதுகுறித்து பேசுவதற்கும், எழுதுவதற்கும் தடைவிதிப்பதுமான போக்குகள் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். ஸ்ரீமதி மரணத்தில் புலப்படாதிருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத்தரக் கோரியும் இயங்கி வரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் ஏற்கவே முடியாத சனநாயகப் படுகொலையாகும்.

ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிகேட்டு கருத்துப்பரப்புரை செய்த, போராடிய இளைஞர்களைக் கைதுசெய்து சிறையிலடைப்பதும், இதுகுறித்து பேசவிடாது ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிப்பதுமான திமுக அரசின் அதீதச்செயல்பாடுகள் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. யாரை காப்பாற்றுவதற்காக எல்லோரையும் பேசவிடாது, நெருக்கடி கொடுத்து இவ்வாறு முடக்குகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மீதான கைது நடவடிக்கையைக் கைவிட்டு, அவரை எவ்வித வழக்குமின்றி விடுவிக்க வேண்டுமெனவும், கருத்துச் சுதந்திரத்திற்கெதிரான இக்கொடுங்கோல்போக்கை முழுமையாக விலக்கிக்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT