ADVERTISEMENT

தமிழக முதல்வரை பதவி நீக்கம் செய்து, காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: ஆளுநருக்கு பால் முகவர்கள் சங்கம் கடிதம்

10:00 AM Jul 01, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

"தமிழக முதல்வரை பதவி நீக்கம் செய்து, முதல்வர் வசம் உள்ள காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்" எனத் தமிழக ஆளுநருக்கு பால் முகவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

உயர்திரு தமிழக ஆளுநர் அவர்களுக்கு வணக்கம்.

சாத்தான்குளத்தில் அலைபேசி கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து போன நிலையில் அச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் நீதித்துறை நடுவரையே மிரட்டுகின்ற வகையில் ஒருமையில் பேசியிருப்பது காவல்துறை மக்களின் நண்பன் என்கிற கூற்றை மறுபரிசீலனை செய்யும் நேரம் இது என உணர்த்தியுள்ளது.

மேலும் 159 ஆண்டுகால இந்திய காவல்துறை வரலாற்றில் இது வரை இல்லாத வகையில் தற்போது சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருப்பதும், சம்பந்தப்பட்ட காவலர்களும், உயரதிகாரிகளும் நீதித்துறையையே மிரட்டிப் பார்த்த நிகழ்வுகளும் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயலாகவும், காவல்துறையை சீர் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதையும் உணர்த்துகிறது.

காக்கிச்சட்டையும், தொப்பியும் அணிந்து, கையில் லத்தியைப் பிடித்து விட்டால் வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாக ஒரு சில காவலர்கள் எண்ணிக் கொண்டு தங்களை சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரிகளாக காட்டி நடந்து கொள்வதற்குக் காரணம் ஆட்சியாளர்கள் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது.

ஏனெனில் ஆட்சியாளர்கள் செய்கின்ற ஊழல்களை, முறைகேடுகளை மறைக்கவும், தங்களின் தவறுகளுக்கு உடந்தையாகவும் செயல்படுகின்ற வகையில் காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி வைத்திருப்பதைத் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள் இவ்வுலகிற்கு சாட்சியாக வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.

மேலும் உயிர் காக்கும் மருத்துவத்துறை, அரசின் பல்வேறு அத்தியாவசிய துறைகளைச் சார்ந்தவர்களின் நலன் காக்க பல்வேறு நலச்சங்கங்கள் இருக்கையில் மக்களைக் காக்கும் காவல் பணியில் ஈடுபட்டு வரும் கடைநிலை காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை தங்களின் குறைகளை, மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பதற்கோ, அல்லது தங்களின் குறைகளைக் களைவதற்கோ எந்த ஒரு அமைப்பும் இல்லாமல் இருப்பதும், சங்கம் அமைக்க அனுமதி மறுப்பதும், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் டாஸ்மாக் கடைகளுக்கும், அங்கே சாராயம் விற்பனை செய்வோருக்கும், சாராயம் குடிக்க வருவோருக்கும் பாதுகாப்பளிக்கின்ற தேவையற்ற பணிகளில் எல்லாம் அவர்களைப் பயன்படுத்துவதும் அவர்களின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் காரணிகளாக அமைந்துள்ளது.

ஏற்கனவே காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்ட மற்றொரு வழக்கில் காவல்துறையை சீர் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு ஆண்டுகள் பல கடந்தும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் வழக்கம் போல் அந்த உத்தரவையும் கல்லைக் கட்டி கடலில் வீசியது போன்று அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறது தமிழக அரசு.

அதுமட்டுமின்றி உள்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை போன்ற பல்வேறு துறைகளை முதல்வர் தன்னகத்தே வைத்துக் கொள்வது அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளை தலையாட்டி பொம்மைகளாக்கி தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்கும் செயலாகும்.

அதனால் காவல்துறையை தன்னகத்தே வைத்திருக்கும் தமிழக முதல்வரே சாத்தான்குளம் விவகாரத்திற்கு முழு பொறுப்பாகும் என்பதால் தமிழக முதல்வரை பதவி நீக்கம் செய்து அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வராக நியமிப்பதோடு, முதல்வர் வசம் உள்ள காவல்துறையைப் பிரித்து அப்பொறுப்பிற்கு தனி அமைச்சரையும் நியமித்து உத்தரவிட வேண்டும்.

அத்துடன் தமிழக காவல்துறையை சீர் செய்திடவும், காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், கடைநிலை காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை பணியில் இருப்போரின் மன அழுத்தத்தை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT