Skip to main content

EXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்! 

 

sathankulam


சட்டத்திற்குப் புறம்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த விவகாரத்தில் எஸ்.ஐ.க்கள், இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து, ஒட்டு மொத்த ஸ்டேஷன் காவலர்களையும் இடமாற்றம் செய்த காவல்துறை, இருவரின் மரணத்தின் காரணிகளில் ஒன்றான ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பக்கமே விசாரணையை ஆரம்பிக்காமல், அவர்களைத் தப்பிக்க விடுகின்றதா மேலிடம் என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.

 

"சாத்தான்குளம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பண்டாரபுரம், நெடுங்குளம், அமுதுண்ணாக்குடி, பேய்க்குளம், பனைகுளம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸார் மட்டும் ஏறக்குறைய 60 நபர்கள். கரோனா நேரத்தில்தான் இந்தளவு எண்ணிக்கை உயர்ந்தது. வழக்கமாக தன்னுடன் மூன்று ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பசங்களை கூப்பிட்டு சுத்துற எஸ்.ஐ .ரகுகணேஷ் தன்னுடைய புல்லட்டில் ஒருத்தனையும், இன்னொரு வண்டியில் இரண்டு பேருமாக மொத்தம் நான்கு பேராக இருந்துதான் வாகன தணிக்கை செய்வாரு. இதில் ஒருத்தன் நீளக் கழியோட நின்று வாகனத்தை மறிக்க, எஸ்.ஐ. ரகுகணேஷ் அபராதத்தைப் போடுவாரோ இல்லையோ, அடியைப் போடுவாரு. அதிலும் அவனோட சமூக ஆள் இல்லாமல் வேற சமூக ஆள் என்றால் அவ்வளவுதான், முதுகு பழுத்திரும். அவர்கூட சேர்ந்து இந்த பசங்களும், வயசு பார்க்காமல் கண்டவனையும் அடிப்பானுக'' என்கிறார் நெடுங்குளத்தைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர்.

 

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண விவகாரத்தில் சம்பவம் நடைபெற்ற பொழுது எஸ்.ஐ.க்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருடன் இணைந்து அடித்துக் கொன்றது ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்களான கணபதி, கண்ணன், ஜேக்கப் மற்றும் எலிசா ஆகியோர் என ஜெயராஜ் மனைவி செல்வராணியின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு நீதித்துறை கடுமையாகக் களத்திலிருங்க, தலைமைக் காவலர் ரேவதியின் ஒப்புதல் வாக்குமூலம் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை அடையாளம் காட்ட, விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கரோனா காலத்தில் இணைந்தவர்களைத் தவிர மீதமுள்ள ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவின் 12 நபர்கள் தலைமறைவாகினர். தங்களுடைய முகத்தை மட்டுமின்றி, முகநூல் பக்கங்களையும் முடக்கி, தேரிக்காடுகளில் மறைந்து வாழ்கின்றனர் பலர்.

 

குலசையைச் சேர்ந்த நண்பர் துணையுடன், கடும் பிரயத்தனத்திற்கு பிறகு மறைந்திருக்கும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினைச் சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் பேசினோம். புகைப்படம், பெயர் தர மறுத்த நிலையில் பென்னிக்ஸிற்கும், ஜெயராஜிற்கும் நடந்தது என்ன என ஒப்புதல் வாக்குமூலமாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர்.

 

"எப்பொழுதும் ரகுகணேஷ் எஸ்.ஐயோட திரியும் நான் அன்னைக்கு எஸ்.ஐ. பால கிருஷ்ணனோட திரிஞ்சேன். அன்னைக்கு 7.45மணி இருக்கும். செல்கடை பக்கம் வண்டியை நிறுத்தி சீக்கிரம் அடைங்கலேன்னு" பாலகிருஷ்ணன் சப்தம் போட்டுட்டு கிளம்பிட்டார். சாப்பிடுவதற்கு ஏதாச்சும் வாங்கி வைச்சுக்கலாம்னு நினைக்கையில் எங்க கூட வந்த ஏட்டையா குண்டாஸ் குமார், எனக்கும் சேர்த்து புரோட்டா வாங்கி வந்துடுலேன்னு சொல்லிட்டு கடைக்குப் பக்கத்துல இருக்க ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கும் ஆட்டோ ஒன்றில் உட்கார்ந்து சரக்குப் போட போய்ட்டாரு. இந்தப் பிரச்சனைக்கு காரண கர்த்தாவே அவர் தான் சார்.

 

நானும் ரொட்டி, சால்னா வாங்கிட்டு வந்து அவரைக் கூப்பிடும் போது, ஜெயராஜ் பென்னிக்ஸ் இருவரும் எஸ்.ஐ. குறித்து யதார்த்தமாக பேசியது எங்களுக்கும் காதுல விழுந்தது. ஆனா கண்டும் காணாமல் போய்ட்டோம். ஆனால், பேசாத ஒன்றை பேசினதாக எஸ்.ஐ .பாலகிருஷ்ணன் தொடங்கி ஸ்டேஷனில் அத்தனை பேரிடமும் கூறிட்டார் ஏட்டையா குண்டாஸ் குமாரு.

 

மறு நாள் காலையில், மற்றொரு ஏட்டையாவும் இந்த விசயத்தை எஸ்.ஐ. பாலகிருஷ்ணனிடம் பற்ற வைக்க, கோபம் தாங்காமல் நேரடியாகவே பென்னிக்ஸ் கடைக்குப் போனாரு எஸ்.ஐ. நானும் கூடப் போனேன். கடைக்கு முன்னாடி வண்டியை விட்டு நிறுத்தி, "தனியாத்தான் வந்திருக்கேன். ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்த, சுற்றியுள்ள கூட்டம் சமாளித்து அனுப்பிட்டாங்க. அதன்பின் சாயந்திர நேரம் ஸ்டேஷனுக்குக் கூட்டி வரப்பட்டார்கள் இருவரும்.

 

இசக்கி, எலிசா, கணபதி, முத்து, ஜேக்கப், கண்ணன், ராமு, சுந்தரேஷ் உள்ளிட்ட எங்க பசங்களையும் உடனடியாக ஸ்டேஷனுக்கு வரச்சொன்னாக. நாங்களும் ஆர்வத்துல போக, கையில் லத்தி கொடுத்து பென்னிக் ஸையும், ஜெயராஜையும் அடிக்க வைச்சாங்க. எங்களுக்கு ஏற்கனவே பழகிப்போனதால் பெரிதாக ஒன்று மில்லை. நாங்களும் ரத்தம் வரும் வரைக்கும் அடிச்சோம். அது போக ஸ்டேஷனில் இருக்கும் அத்தனை பேரும் அடிக்கனும், அடிக்காதவங்க யாருன்னு சொல்லனும்னு இன்ஸ்பெக்டர் கூற, வர்றவன் போறவனெல்லாம் அடிச்சாங்க. ரத்தப் போக்கு இருந்தது உண்மை.

 

http://onelink.to/nknapp

 

நாங்க என்ன பண்ணுவோம் சார்! எங்களை அடிக்க சொன்னாங்க அடிச்சோம். அடிக்கலைன்னா எங்களைச் சேர்த்துக்க மாட்டாங்களே! நாளைக்கு ஏதாவது ஒரு வழக்கில் எங்களையும் கோர்த்துவிடுவாங்க. அதனால்தான் அடிச்சோம். ஆனால் அது இந்தளவிற்கு ஆகும்னு எதிர்பார்க்கலை. இப்ப உயிருக்கு பயந்து ஓடிக்கிட்டிருக்கோம். முறையாக விசாரித்தால் எங்களிடமுள்ள வீடியோ ஆவணங்களைச் சமர்ப்பிக்க நாங்கள் தயார்'' என்கிறார் அவர்.