ADVERTISEMENT

சவுடு மணல் எடுப்பதாக ஊற்றுமண் கொள்ளை... அரசு கஜானாவிற்கு நட்டத்தை ஏற்படுத்தும் அதிகாரிகள்!  

07:02 PM Sep 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை, வேளங்கிபட்டு, அத்தியாநல்லூர், மணிகொல்லை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இயற்கையாகவே சவுடு மணல் விளை நிலங்களில் சமதளத்தில் மேடுகளாக உள்ளது. இந்த பகுதிகளில் விவசாயிகள் மணிலா, சவுக்கை, பூச்செடிகள், முருங்கை, முந்திரி, கம்பு, எள், கத்தரி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர் செய்து வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆற்று மண் விலை பல்லாயிரக்கணக்கில் உயர்ந்துள்ளதால் அந்த பகுதியில் உள்ள சிலர் விவசாய நிலங்களில் ஆற்று மணலைவிட நைசாக இருக்கும் சவுடு மணலை எடுக்க புவியியல் துறையில் அனுமதி பெற்று சில மேடான விளைநிலங்களில் சவுடு மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இது கட்டிட வேலையில் செயற்கை மண்ணுடன் கலந்து கட்டிடம் கட்டவும், வீடு கட்டப்பட்டு தரைதளத்தில் இந்த மண்ணை கொண்டு நிரப்பினால் குளிர்ச்சியாக தரை இருக்கும் அதனால். சவுடு மணல் தற்போது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஒரு லாரி மண் 50 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்திலும் ஒரு அனுமதியை மட்டும் வைத்துக் கொண்டு அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி கள்ளத்தனமாக மற்ற இடங்களையும் எடுத்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை பாழ்படுத்தி கடல் நீர் உட்பகுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

சட்டத்திற்கு புறம்பாக இரவு பகல் பாராமல் 100 முதல் 200 லாரிகள் வரை தொடர்ந்து மணல் அள்ளி வருவதால் அப்பகுதியில் உள்ள சாலைகள், விவசாய போர்வெல்கள் பழுதாகி உள்ளதாக அப்பகுதி உள்ள விவசாயிகள் வேதனை தெரிவித்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

இதுகுறித்து மணிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில், ''தற்போது கொத்தட்டை மற்றும் அத்தியாயநல்லூர் கிராமத்தில் மணல்குவாரி இயங்கி வருகிறது. அரசு சவுடு மணலை 6 அடிக்கு கீழே எடுக்கக் கூடாது என கூறியுள்ளது. இந்த ஆறு அடிக்குள் எடுத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இவர்கள் 6 அடிக்கு அனுமதி வாங்கிக்கொண்டு 30 அடி வரை ஆழத்தில் மண்ணை எடுக்கிறார்கள். இந்த பகுதியில் 10 அடி வரைதான் சவுண்டு மணல் இருக்கும். 10 அடிக்கு கீழே சேறும் சகதியுமாக ஊற்றுமண் இருக்கும் இதில் நீர் வளம் சேமிக்கப்பட்டு இருக்கும். இது ஆற்று மணல் போல உள்ளதால் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பதத்தில் இருக்கும். இந்த சேறு சகதியுமான மண்ணை பொக்லின் மூலம் 30 அடி ஆழ தோண்டி எடுத்து மேலே போட்டு மற்ற ஒரு பொக்ளின் மூலம் மண் உலர்ந்த பிறகு லாரியில் ஏற்றி ஆற்று மணல் விலைக்கு லட்சக்கணக்கில் பெருநகரங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார்கள். இதனால் அந்த ஊற்று மண்ணை வெளியே எடுத்து விட்டால் கடல் உப்பு நீர் நிலத்தடிக்குள் புகுந்து நிலங்கள் அனைத்தும் உப்பு நீராக மாறிடும். 15 அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது 300 அடிக்கு போர் போட்டும் போர் அடிக்கடி தண்ணீர் இல்லாததால் பழுதாகிறது. எனவே இந்த பகுதியில் சவுடு மணல் குவாரிக்கு அனுமதியே கொடுக்கக்கூடாது. காவல்துறை, வருவாய் துறையினருக்கு செய்ய வேண்டிய கடமையை தினத்தண்டல் போல் செய்துவிட்டு திருட்டு தனமாக மணலை அள்ளி அரசுக்கு பல கோடி ரூபாயை நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள்'' என்கிறார்.

வேளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் கூறுகையில்,''கொத்தட்டை ஊராட்சி முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் அடியாட்களை கையில் வைத்துக் கொண்டு மாலை நேரங்களில் இளைஞர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து மிரட்டி 24 மணி நேரமும் இங்குள்ள வளங்களை அழித்து வருகிறார். கேட்டால் அமைச்சர் உள்ளிட்ட இங்குள்ள அனைத்து கட்சி காரனுக்கும், போலீசுக்கும், மைன்ஸ், வருவாய் என அனைவருக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்துதான் தொழில் செய்து வருகிறோம். உனக்கு என்ன தேவை என்று கூறு அதை விட்டுவிட்டு அநாவசியமாக தலையிட வேண்டாம் கேட்பவர்களை மிரட்டி வருகிறார்.

சிலர் இதனையும் மீறி கேட்டால் சமாதானம் செய்து சொற்ப பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள். மணல் எடுத்த இடத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இது தெரியாமல் அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் சவுடு மணல் என்ற போர்வையில் ஊற்று மண் எடுக்கிறவனுக்கு துணை போய் வரும் சந்ததியை அழிக்கிறார்கள். இதனைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டால் காவல்துறை மிரட்டுகிறது. சரியான நடவடிக்கை இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்'' என்றார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் கூறுகையில், ''இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரவலாக பேசி வருகிறார்கள். நடப்பது உண்மை தான் சம்பந்தப்பட்ட விவசாயிகளோ, கிராம மக்கள் கடிதமாகக் கொடுத்தால் மார்க்சிஸ்ட் கட்சி இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு துணையாக இருக்கும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT