ADVERTISEMENT

சேலம்: தனியார் மருத்துவமனை நோயாளிக்கு கரோனா தொற்று! செவிலியர் உள்பட 10 பேருக்குப் பரிசோதனை!

07:39 AM Apr 25, 2020 | santhoshb@nakk…


சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அங்குப் பணியில் இருந்த செவிலியர் உள்பட பத்து பேருக்கு சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதித்தபோது கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தகவல் அறிந்த சுகாதாரத்துறை, மாநகராட்சி ஊழியர்கள் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட நோயாளி தங்கியிருந்த கட்டடம் மற்றும் தரைதளப் பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.

ADVERTISEMENT


மேலும், புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்து அம்மருத்துவமனைக்குச் செல்லும் வழித்தடம் மற்றும் மருத்துவமனைக்குப் பின்பக்க சாலையையும் தடுப்புக்கட்டைகள் வைத்து சீல் வைத்தனர்.

மருத்துவமனையின் முகப்பு வாயிலும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. புதிய நோயாளிகள் அட்மிஷன் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. உள்நோயாளிகள் யாரும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. நோயாளிக்குச் சிகிச்சை அளித்ததாகச் செவிலியர்கள், தொடர்பில் இருந்த இதர ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.


இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், இந்த மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, ஏப். 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாள்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அந்தச் செவிலியர் மருத்துவமனையில் இருந்து பணி முடிந்து ஏப். 21- ஆம் தேதி வீட்டிற்குத் திரும்பியது வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. செவிலியர், அவருடைய தந்தை, தாயார், அருகில் வசித்து வரும் உறவினர்கள் உள்பட 10 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்படி பத்து பேரும் மல்லசமுத்திரம் கீழ்முகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT