ADVERTISEMENT

சேலம் ரவுடி கொலை வழக்கில் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

11:31 AM Dec 09, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில் ரவுடி கொலை வழக்கில் பிணை உத்தரவின் பேரில் சிறையில் இருந்து வெளியே சென்று ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த மற்றொரு ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை. கொலை, ஆள்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஜான் என்கிற சாணக்யா உள்பட 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் மீதான விசாரணை சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட இருந்த நிலையில், பிணை உத்தரவின் பேரில் சிறையில் இருந்து வெளியே சென்ற ரவுடி ஜான் திடீரென்று தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது. கடந்த ஆறு மாதங்களாக காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். அவர் கைது செய்யப்படாததால் இந்த வழக்கில் கைதான மற்றவர்களுக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் ரவுடி ஜான் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ஜானை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இவர் மீது 2 கொலை வழக்கு உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிடிபட்ட ஜானை நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

செல்லத்துரை கொலை வழக்கு டிச. 22 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT