ADVERTISEMENT

காவலர்கள் மீது குவியும் புகார்கள்; அடுத்தடுத்து இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்

10:37 AM Mar 18, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குச் செல்ல வழி தெரியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய இளைஞரிடம் கைப்பேசியை பறித்துக்கொண்டு, உதவி செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்ட சிறப்பு எஸ்.ஐ ஒருவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் களரம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர், கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) நள்ளிரவு தன் வீட்டு வழியாக ஒரு மூதாட்டி தடுமாறியபடி சென்றதைப் பார்த்தார். இதுகுறித்து அவர் உடனடியாக சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து, மூதாட்டிக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதன்பேரில், கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து எஸ்எஸ்ஐ கலைச்செல்வன் சம்பவ இடத்திற்குச் சென்றார். திடீரென்று அவர் பிரபாகரனிடம் இருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு, ''ஏன் இரவு நேரத்தில் தேவையில்லாமல் தொந்தரவு செய்கிறாய்? நீயே அந்த மூதாட்டியின் வீட்டைக் கண்டுபிடித்து வீட்டில் விட்டுவிட்டு வந்துவிடு. அதன்பிறகு காவல் நிலையத்திற்கு வந்து கைப்பேசியை வாங்கிக்கொள்'' என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்.

அதற்கு பிரபாகரன், ''நானே மூதாட்டியை அவருடைய வீட்டில் சேர்த்து விடுகிறேன். ஆனால், என்னுடைய கைபேசியை கொடுத்து விடுங்கள்'' என்று கேட்டுள்ளார். அதற்கு எஸ்எஸ்ஐ கலைச்செல்வன் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, மூதாட்டியின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியாததால், விடிய விடிய பிரபாகரன் தன் சொந்த பாதுகாப்பில் மூதாட்டியை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். மறுநாள் காலையில் பிரபாகரன், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் எஸ்எஸ்ஐ கலைச்செல்வன் மீது புகார் அளித்தார். அதன்பேரில், துணை ஆணையர் லாவண்யா விசாரணை நடத்தினார். இதற்கிடையே, காவல்துறையினர் மூதாட்டியை மீட்டு உரிய முகவரியில் சேர்த்தனர். பணி நேரத்தில், உதவி கேட்ட பொதுமக்களிடம் அலட்சியமாக நடந்து கொண்டதாலும், கடமை தவறியதாலும் எஸ்எஸ்ஐ கலைச்செல்வனை உடனடியாக மாநகர ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, சேலம் நகர காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சிவக்குமாரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடைய உறவினர் ஒருவர் சேலம் கடைவீதியில் பழக்கடை வைத்துள்ளார். அவருக்கும், அருகில் பழக்கடை வைத்துள்ள மற்றொருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காவலர் சிவக்குமார் தன் உறவினரை பக்கத்துக் கடைக்காரர் எடைக்கல்லால் தாக்க முயன்றதாக காவல்துறை மேலிடத்திற்கு தவறான தகவலை கொடுத்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காவலர் சிவக்குமார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT