ADVERTISEMENT

பட்டப்பகலில் பட்டறைக்குள் புகுந்து அரிவாள் வெட்டு; முகமூடி அணிந்த ரவுடிகள் வெறிச்செயல்!

12:42 PM Jan 27, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில், பட்டப்பகலில் இரும்பு கிரில் பட்டறைக்குள் புகுந்த முகமூடி அணிந்த ரவுடிகள் மூன்று பேர், அதன் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம், செவ்வாய்பேட்டை நரசிம்மன்செட்டி சாலையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர், பள்ளப்பட்டி கோரிக்காடு பகுதியில் கிரில் பட்டறை வைத்துள்ளார். ஜன. 25ம் தேதி காலை, சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் சாரதி (19), பாஸ்கர் (45) ஆகியோர் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் மூன்று பேர் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து இருந்தனர்.


திடீரென்று பட்டறைக்குள் புகுந்த அவர்கள், அரிவாளால் சிவக்குமாரை சரமாரியாக வெட்டினர். இதைத் தடுக்க வந்த ஊழியர்களையும் வெட்டினர். இதில் நிலைகுலைந்த மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.


அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் நிகழ்விடம் வந்து பார்த்தனர். அங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவக்குமார், சாரதி, பாஸ்கர் ஆகிய மூவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


பட்டறையில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிவக்குமார் உள்ளிட்டோரை அரிவாளால் வெட்டும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது தெரிய வந்தது.


கடந்த 15 ஆண்டுக்கு முன்பு, சிவக்குமாரின் வீட்டில் திருமலைகிரியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் குடியிருந்து வந்தார். பின்னர் வீட்டை காலி செய்யும்படி சிவக்குமார் கூறியபோது, அந்த வீட்டை தங்களுக்கே கொடுக்குமாறு ஏழுமலை கேட்டுள்ளார். இதற்கு அப்போது ஒப்புக்கொண்ட சிவக்குமார், வீட்டை கொடுப்பதாகக்கூறி முன்பணமாக ஏழுமலையிடம் இருந்து 4.90 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி ஏழுமலை தரப்புக்கு வீட்டை விற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்ததோடு, ஏற்கனவே இது தொடர்பாக அன்னதானப்பட்டி காவல்நிலையத்திலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


அந்த வழக்கில் இருதரப்பையும் அழைத்துப் பேசிய அன்னதானப்பட்டி காவல்துறையினர், சிவக்குமார் தரப்பு மேலும் 21 லட்சம் ரூபாயை ஏழுமலைக்குக் கொடுக்க வேண்டும் என்றும், இதில் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்றும் சமரசம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக இருதரப்பிலும் எழுதி வாங்கப்பட்டது. இதையடுத்து சிவக்குமார் தரப்பில் முதல்கட்டமாக 5 லட்சம் ரூபாய் ஏழுமலையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 16 லட்சம் ரூபாயை நடப்பு ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் கொடுத்து விடுவதாகவும் சிவக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.


ஆனாலும், ஏழுமலை தரப்பினர் அடிக்கடி சிவக்குமாரிடம் மீதப்பணத்தைக் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதன் பின்னணியில்தான் ஏழுமலை ரவுடிகளை ஏவி விட்டு சிவக்குமாரை தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் ஏழுமலையின் மகன் பாபு என்பவர்தான் மூலையாக செயல்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பொறியியல் பட்டதாரியான அவர், தற்போது ஜார்க்கண்டு மாநிலத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.


இதற்கிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிவக்குமார் உள்ளிட்ட மூன்று பேரிடமும் மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி, உதவி ஆணையர் நாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பள்ளப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT