ADVERTISEMENT

சேலம் பெரியார் பல்கலை., புதிய துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம்!

10:45 PM Jun 30, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சேலம் பெரியார் பல்கலை புதிய துணைவேந்தராக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை., முன்னாள் டீன் ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை (ஜூன் 30) பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக இருந்து வந்த பேராசிரியர் குழந்தைவேலுவின் பதவிக்காலம் கடந்த ஜன. 8- ஆம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இப்பதவிக்கு 150- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் இருந்து 10 பேரை தேர்வு செய்து, தேடுதல் குழு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. அதிலிருந்து சென்னை பல்கலை இயற்பியல் துறை பேராசிரியர் வேல்முருகன், அழகப்பா பல்கலை பேராசிரியர் மாணிக்கவாசகம், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் டீன் ஜெகன்நாதன் ஆகிய மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அவர்களில் இருந்து கல்வித்தகுதி, நிர்வாகத்திறனில் முன்னனுபவம், ஆய்வுக்கட்டுரைகள் வெளியீடு, முனைவர்களை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஒருவரை ஆளுநர் தெரிவு செய்வார். அதன்படி, பெரியார் பல்கலையின் புதிய துணைவேந்தராக ஜெகன்நாதனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

புதிய துணைவேந்தர் ஜெகன்நாதன், மூன்று ஆண்டுகள் துணைவேந்தர் பதவியில் நீடிப்பார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் டீன் பதவியிலும் இருந்துள்ளார். 39 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ள இவர், 55 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச ஆய்வரங்குகளில் மட்டும் 14 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுள்ளார். பணிக்காலத்தில் 5 முறை சர்வதேச கல்வி ஆய்வரங்குகளை நடத்தியுள்ளார்.

யுஜிசி மற்றும் பல்வேறு நிதி நல்கை முகமைகள் மூலம் 7.64 கோடி ரூபாய் மதிப்பில் 8 ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி உள்ளதோடு, 14 பிஹெச்.டி., ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கி உள்ளார்.

கல்வியாளராக மட்டுமின்றி, சமூக வெளியில் பணியாற்றுவதிலும் ஆர்வமாகச் செயல்படக்கூடிய ஜெகன்நாதன், சுனாமியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி, வேளாண் துறையில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளித்துள்ளார்.

வேளாண் துறையில் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி, அவருக்கு அசோசியேஷன் ஆப் அக்ரோ மெட்டீயோராலஜி அமைப்பு கடந்த 2017- ல் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

வியாழக்கிழமை (ஜூலை 1) சென்னையில் நடக்கும் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், அன்று மாலை அல்லது மறுநாள் (வெள்ளிக்கிழமை) பெரியார் பல்கலையில் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT