ADVERTISEMENT

சந்தேகத்தால்  மனைவியை சம்மட்டியால் அடித்து கொன்ற கணவன்; போலீசுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை!

07:13 PM Feb 21, 2019 | elayaraja

ADVERTISEMENT

சேலத்தில் குடும்பத் தகராறில் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியை சம்மட்டியால் அடித்து கொலை செய்தார். காவல்துறையினர் கைது நடவடிக்கைக்கு பயந்து கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ADVERTISEMENT


சேலம் சின்னத்திருப்பதி காந்தி நகரைச் சேர்ந்தவர் காளியப்பன் (55). இவருடைய மனைவி சாந்தா (50). இருவரும் கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு இந்திராணி என்ற மகளும், முருகன் என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.


கட்டடத் தொழிலாளியான முருகனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவியுடன் பெற்றோர் வசிக்கும் வீட்டின் மற்றொரு பகுதியில் வசிக்கிறார். காளியப்பனுக்கு சொந்த ஊர், சங்ககிரி அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஆகும். அங்கு அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.


கடந்த சில ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்த சாந்தா, சில வாரங்களாக மீண்டும் வேலைக்குச் சென்று வந்தார். அதிலிருந்து அவருடைய நடவடிக்கையில் காளியப்பனுக்கு சந்தேகம் இருந்து வந்தது. மனைவியை எங்கும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று காளியப்பன் கூறி வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.


நேற்று (பிப்ரவரி 20, 2019) மாலையில் சாந்தா வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். இரவு குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்த காளியப்பன், மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அவர்களை மகனும், மருமகளும் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். ஆனால் காளியப்பன், நள்ளிரவு வரை தூங்காமல் இருந்துள்ளார். சொல்பேச்சைக் கேளாமல் வேலைக்குச் சென்ற மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த அவர், வீட்டில் இருந்த சம்மட்டியை எடுத்து மனைவியின் தலையில் அடித்து படுகொலை செய்தார்.


கொலைத் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன், மகனும் மருமகளும் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு வந்துள்ளார். சம்மட்டியால் தொடர்ந்து பலமாக தாக்கியதால் சாந்தா மூளை சிதறி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதனால் அவரால் கூச்சல்கூட போட முடியாததால், அருகில் வசிப்போருக்கும் இந்த கொலை சம்பவம் குறித்து தெரியவில்லை. அதன்பின் காளியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


இன்று அதிகாலையில் எழுந்த முருகன், கதவை திறக்க முயன்றபோது அது பூட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து வந்து பார்த்தபோது, அங்கே தனது தாய் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தாயின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதார்.


இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்கவேல் மற்றும் காவலர்கள், நிகழ்விடம் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தலைமறைவான காளியப்பனை தேடி வந்தனர். இதற்கிடையே, சங்ககிரியில் உள்ள உறவினர்கள் முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு, அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் காளியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர். அவருடைய சடலத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கொலைக்குப் பயன்படுத்திய சம்மட்டியை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT