ADVERTISEMENT

நோயாளியாக வந்தவர் கைதியாகச் சிறை சென்றார்! மருத்துவர்களை மிரட்டியதால் வந்த வினை!!

07:54 AM Jun 06, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சேலத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நோயாளியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர், மருத்துவர்களைக் கத்தி முனையில் மிரட்டிய புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு அதிகளவில் கரோனா நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. வெளியிடங்களில் இருந்து சேலத்திற்குள் நுழைபவர்களுக்கு மாவட்ட எல்லையிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இந்நிலையில், கடந்த மாதம் 25- ஆம் தேதி, சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த மாதேஸ்வரன் (40) கரோனா தொற்று காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கருப்பூரில் உள்ள மணிப்பால் மருத்துவனையில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்தார். வெளி மாநிலத்தைச் சேர்ந்த நோயாளிகளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்றதன் மூலம் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதால் விரக்தி அடைந்த அவர் மூன்று நாள்களுக்கு முன்பு, திடீரென்று பழம் அறுக்கும் கத்தியைக் காட்டி, தன்னை உடனடியாக மருத்துவமனையில் இருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மிரட்டினார். இதனால் மிரண்டு போன மருத்துவர்கள், அவரிடம் சகஜமாக பேச்சுக்கொடுப்பது போல் பேசி, அவரிடம் இருந்த கத்தியைப் பறித்துக் கொண்டனர். அதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.


தொடர் சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. பூரண குணமடைந்ததை அடுத்து, அவரை மருத்துவமனையில் இருந்து ஜூன் 4- ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்தனர். இதற்கிடையே, மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, உள்தங்கு மருத்துவ அலுவலர் கருணா, அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின்பேரில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் மாதேஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர். நோயிலிருந்து குணம் பெற்று வீடு திரும்ப தயாராக இருந்த நிலையில், அவரை காவல்துறையினர் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்து, சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT