ADVERTISEMENT

காதல் ஜோடி சயனைட் சாக்லெட் தின்று தற்கொலை! விரிவான தகவல்கள்!!

07:57 AM Oct 10, 2019 | santhoshb@nakk…

சேலத்தில் இளம் காதல் ஜோடி சயனைட் கலந்த சாக்லெட் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

சேலம் செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவைச் சேர்ந்தவர் கோபி. வெள்ளிப்பட்டறை அதிபர். இவருடைய மகன் சுரேஷ் (22). பிளஸ்2 வரை படித்துள்ள சுரேஷ், தந்தையுடன் சேர்ந்து வெள்ளி கொலுசுகளுக்குத் தேவையான ஜால்ரா தயாரிக்கும் வேலைகளை கவனித்து வந்தார்.

ADVERTISEMENT



செவ்வாய்க்கிழமை (அக். 8) மதியம் ஒரு மணியளவில், வீட்டில் இருந்து கிளம்பிச்சென்ற சுரேஷ், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எங்கே சென்றாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பி விடுவதை வழக்கமாக வைத்திருந்த சுரேஷ், வெகுநேரமாக வீட்டுக்கு வராததால் பெற்றோர் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் பெற்றோர் பதற்றம் அடைந்தனர்.


பல இடங்களிலும் மகனைத் தேடி அலைந்தனர். நண்பர்கள் வீடுகளிலும் விசாரித்தனர். இந்நிலையில், இரவு 11 மணியளவில், சேலம் ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே, கோபிக்குச் சொந்தமான கார் ஷெட் முன்பு, சுரேஷ் ஓட்டிச்செல்லும் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. சந்தேகத்தின்பேரில் கார் ஷெட்டை திறந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் பின் இருக்கையில் சுரேஷூம், அவர் அருகில் ஓர் இளம்பெண்ணும் வாயில் ரத்தமும், நுரையும் வெளியேறியபடி, அமர்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தனர். அவர்கள் இருவருமே அரைகுறை ஆடையில் கிடந்தனர். இதைக் கண்டு சுரேஷின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து சுரேஷின் பெற்றோர் செவ்வாய்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர்கள் சுந்தராம்பாள் (செவ்வாய்பேட்டை), சரவணன் (சேலம் நகரம்) மற்றும் காவலர்கள் விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். உடற்கூறாய்வுக்காக சடலங்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



சுரேஷ் அருகே சடலமாகக் கிடந்த இளம்பெண், சேலம் குகை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவி மகள் ஜோதிகா (20) என்பதும், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. சுரேஷூம், ஜோதிகாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், சுரேஷ் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரளவுக்கு ஜோதிகாவின் குடும்பம் வசதி இல்லாததால், சுரேஷின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.


இந்த நிலையில்தான் காதலர்கள் தற்கொலை முடிவை எடுத்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் கருதுகின்றனர். சடலம் கிடந்த காரின் பின்னிருக்கையில் சில சாக்லெட்டுகள் சிதறிக்கிடந்தன. சடலங்கள் கைப்பற்றப்படும் வரை காரின் ஏசி ஓடிக்கொண்டிருந்தது. இருக்கையில் ரத்தமும் தோய்ந்து இருந்தது. அவர்கள் இருவரும் சாக்லெட்டில் சயனைடை கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.



அரை நிர்வாணமாகக் கிடந்ததை வைத்து பார்க்கையில் தற்கொலை முடிவெடுப்பதற்கு முன்பாக அவர்கள் உடலுறவு கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். எனினும், உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்டது சயனைடா அல்லது வேறு ஏதேனும் விஷமா? அவர்கள் உடலுறவு கொண்டிருந்தார்களா உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும். இப்போதைக்கு உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் அளித்துள்ள கிளியரன்ஸ் சான்றிதழில், காதலர்களின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை குறிப்பிடவில்லை. சந்தேகம் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது.


அதேநேரம், செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில், இந்த சம்பவத்தை தற்கொலை என்றே எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். காதலர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டிருக்கலாம் அல்லது கண்காணா இடத்திற்குச் சென்று உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கூப்பிடு தொலைவுக்குள் எதற்காக காதலர்கள் தற்கொலை முடிவை எடுக்க வேண்டும் என்ற சந்தேகத்தையும் பலர் தரப்பிலும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் பல்வேறு கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT