ADVERTISEMENT

சேலம் கஞ்சமலை உச்சியில் ஏறிய டாக்டர் திடீர் மாயம்! போலீசாருடன் ஊரே தேடியும் கிடைக்காத மர்மம்!

06:18 PM Mar 17, 2020 | Anonymous (not verified)

சேலம் அருகே தனியார் மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர், கஞ்சமலை உச்சிக்குச் சென்றபோது அங்கு திடீரென்று மாயமானதால், மூன்று நாள்களாக மர்மம் நீடிக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுரவ் பெகரா (33). மருத்துவரான இவர், சேலத்தை அடுத்த அரியானூரில் விநாயகா மிஷன் மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ்., (ஆர்த்தோ) மருத்துவப்பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார்.

கவுரவ் பெகரா, வார விடுமுறை நாள்களில் சேலத்தில் உள்ள முக்கிய இடங்களைச் சுற்றிப்பார்ப்பதற்காக நண்பர்களுடன் வெளியே சென்று வருவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) உடன் படித்து வரும் நண்பர்கள் சைதன்யா, நாகேஷ், அவினாஷ், அக்ஷய் ஆகியோருடன் கவுரவ் பெகராவும் கஞ்சமலையில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றார். கோயிலில் சாமி வழிபாடு முடிந்து அவர்கள் அனைவரும் மலையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கவுரவ் பெகாரவுக்கு அதிகளவில் தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. தண்ணீர் குடித்தால்தான் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும் என்றும், நாக்கு வறண்டு விட்டதால் தண்ணீர் குடிக்காமல் என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது என்றும் கவுரவ் பெகரா, நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார். அதன்படியே அவர் மேற்கொண்டு அங்கிருந்து நகராமல், பாதி வழியிலேயே தரையில் அமர்ந்து விட்டாராம். நண்பர்கள் அனைவரும் மலையடிவாரத்திற்கு வந்துவிட்ட நிலையில் கவுரவ் பெகராவை மட்டும் வரவில்லை.

நீண்ட நேரமாக காத்திருந்தும் அவர் வராததால், உள்ளூர் மக்களை அழைத்துக்கொண்டு நண்பர்கள் மீண்டும் கஞ்சமலைக்கு ஏறிச்சென்று தேடினர். ஆனால் அங்கு கவுரவ் பெகராவை காணவில்லை. செல்போனில் அழைத்தபோதும், அழைப்பு மணி செல்லவே இல்லை.

அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து இரும்பாலை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) காலை முதல் காவல்துறையினர், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்களும் கஞ்சமலையில் கவுரவ் பெகராவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மலையில் இருந்து கீழே இறங்கும்போது வழி தெரியாமல் வேறு பாதைக்குச் சென்று விட்டாரா? அல்லது மலையில் இருந்து பள்ளத்தாக்கு பகுதிகளில் கீழே விழுந்து விட்டாரா? உடன் சென்ற நண்பர்களே ஏதாவது செய்து விட்டு காணாமல் போனதாக நாடகம் ஆடுகிறார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT