ADVERTISEMENT

சேலம் அருகே வடமாநில தம்பதி உள்பட மூவர் வெட்டி படுகொலை!

08:30 AM Mar 09, 2020 | santhoshb@nakk…

சேலம் அருகே, வடமாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி உள்பட மூன்று பேரை டெல்லியில் இருந்து வந்த ஆறு பேர் கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கு முன், வடமாநில பெண்ணை அந்த கும்பல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகே உள்ள பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறையை சொந்தமாக நடத்தி வருகிறார். இவரிடம் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். தங்கராஜூவின் வீட்டுக்குப் பின் பகுதியில் தோட்டம் உள்ளது. தன்னிடம் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்களை அந்த தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே, தங்க வைத்திருக்கிறார்.

ADVERTISEMENT


தங்கராஜூவின் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்த டெல்லி மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஆகாஷ், அவருடைய மனைவி வந்தனா ஆகியோர் அவர்களுடைய பத்து மாத கைக்குழந்தையுடன் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். ஆகாஷின் உறவினர் சன்னி என்பவரும் அவர்களுடனேயே தங்கி இருந்தார். வடமாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட மேலும் சிலர் மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர்.


இது ஒருபுறமிருக்க, சனிக்கிழமையன்று (மார்ச் 7) ஆக்ராவில் இருந்து வினோத் உள்பட நான்கு பேர் புதிதாக தங்கராஜூவின் வெள்ளிப்பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தனர். இந்த நான்கு பேரும், தினேஷூம் அவருடைய நண்பர்களும் தங்கியிருந்த வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டனர்.


இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) இரவு 08.00 மணியளவில், ஆகாஷ் மற்றும் அவருடைய மனைவியும் தங்கி இருந்த வீட்டின் கதவு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. வீட்டுக்கு வெளியே தொட்டிலில் போடப்பட்டிருந்த அவர்களுடைய குழந்தை நீண்ட நேரமாக வீறிட்டு அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். வெளிப்பக்கமாக தாழிடப்பட்டு இருந்த கதவை திறந்து பார்த்தபோது, வந்தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். வந்தனாவின் கணவர் உள்ளிட்டோரை தேடினர். அந்த வீட்டிலிருந்து பின்பக்கத்தில் 300 அடி தொலைவில் உள்ள தோட்டத்தில் ஆகாஷ், உறவினர் சன்னி ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர். உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.


ஒரே இரவில் ஆகாஷ், வந்தனா, சன்னி மூன்று பேர் கொடூரமாக கொல்லப்பட்ட தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர் தங்கதுரை மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை முடுக்கினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மூன்று பேரின் சடலங்களும் கைப்பற்றப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


விசாரணையில், ஆகாஷூம் அவருடைய மனைவியும் ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணியளவில் வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் குடிநீர் பிடித்து வருவதற்காகச் சென்று உள்ளனர். சன்னியும் அவர்களுடன் இருந்துள்ளார். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற வினோத்தும், கூட்டாளிகளும் அவர்களிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டுள்ளனர்.


வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த கும்பல், ஆகாஷையும் அவருடைய உறவினர் சன்னியையும் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். பின்னர், வந்தனாவை தூக்கிச்சென்ற அவர்கள், அவருடைய வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் அவரையும் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. ஆகாஷ் மற்றும் வினோத் ஆகியோரிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.


இதையடுத்து, இந்தக் கொலையில் வினோத் உள்ளிட்ட ஆறு பேர் ஈடுபட்டிருக்கலாம் எனக்கருதும் காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் வழியாக வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கொலைகாரர்கள் குழந்தையை மட்டும் ஏதும் செய்யாமல் விட்டதால், நல்வாய்ப்பாக குழந்தை தப்பித்தது.


கொல்லப்பட்டவர்களும், சந்தேகத்திற்குரிய நபர்களும் தங்கியிருந்த பகுதியில் சில வீடுகளே இருக்கின்றன. அங்கிருந்தவர்களும் உள்ளூர் திருவிழாவைக் காணச் சென்றுவிட்டது கொலையாளிகளுக்கு வசதியாக இருந்துள்ளது. திருவிழாவிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோதுதான் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, வீட்டைத் திறந்து பார்த்துள்ளனர். அதன்பிறகுதான் இந்த சம்பவமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வரும் மற்றவர்களுக்கு ஹிந்தி மொழி மட்டுமே தெரியும் என்பதாலும், அவர்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்ல சம்பவம் நடந்த நேரத்தில் காவல்துறையினர் வசம் ஹிந்தி மொழி அறிந்தவர்கள் இல்லாததும் உடனடியாக கூடுதல் தகவல்களை திரட்டுவதில் சற்று தொய்வு ஏற்பட்டது.


வடமாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் திருமலைகிரி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT