ADVERTISEMENT

பண ஆசை! மகளை இரையாக்கிய கொடூரத் தாய்!

12:59 PM Mar 07, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில், பள்ளியில் படித்து வரும் அரசு மருத்துவரின் மகனின் புகைப்படத்தை கல்லூரி மாணவியின் படத்துடன் ஆபாசமாக சித்தரித்து, பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சங்ககிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மருத்துவர் ரமேஷின் மகன் பிளஸ்2 படித்து வருகிறார். மேலும், நீட் தேர்வுக்காக சிறப்புப் பயிற்சி வகுப்புக்கு சென்று வருகிறார். உள்ளூரைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் அப்பகுதியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்திருக்கிறார்.

மருத்துவரின் மகனுக்கும், உதயகுமாருக்கும் நட்பு ஏற்பட்டு நெருங்கிப் பழகி வந்தனர். இந்நிலையில் ரமேஷூம் அவருடைய மனைவியும் அரசு மருத்துவர்களாக உள்ளதால், அவர்களின் மகனை வைத்து பணம் பறிக்க உதயகுமார் திட்டமிட்டார். இதையடுத்து உதயகுமார், சமூக வலைதளத்தில் இருந்த ரமேஷின் மகனின் புகைப்படத்தை எடுத்து, கல்லூரியில் படித்து வரும் தனக்குத் தெரிந்த பெண் ஒருவரின் மகளின் புகைப்படத்துடன் நெருக்கமாக இருப்பது போல ஆபாசமாக சித்தரித்து (மார்ஃபிங்) உள்ளார்.

மேலும் உதயகுமார், அவருடைய கடையில் வேலை செய்து வரும் தொளசம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (24), ஞானசேகரன் (24) மற்றும் மார்ஃபிங் செய்யப் பயன்படுத்தப்பட்ட கல்லூரி மாணவியின் தாயார் ஆகியோர் மருத்துவர் ரமேஷின் வீட்டிற்குச் சென்று மகனின் ஆபாசப்படத்தைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மாணவியின் தாயார் மூலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் இருக்க தங்களுக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதைக் கேட்ட ரமேஷ், இது சித்தரிக்கப்பட்ட படம். இதை நான் நம்பமாட்டேன். பணமும் தர முடியாது என்று கறாராகக் கூறி அந்த கும்பலை வீட்டை விட்டு விரட்டி அடித்தார்.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு ஞானசேகரனும், கார்த்திக்கும் மருத்துவர் ரமேஷின் வீட்டிற்கு மீண்டும் சென்றனர். மாணவியின் ஆபாசப்படத்தால் அவருடைய தாயார் விஷம் குடித்துவிட்டார். நீங்கள் உடனடியாக 10 லட்சம் ரூபாய் தராவிட்டால் விவகாரம் பெரிதாகி விடும் என மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலுக்கு பயப்படாத ரமேஷ், அவர்களை வீட்டிலேயே உட்கார வைத்துவிட்டு, வேறு அறைக்குச் சென்று சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் அவருடைய வீட்டுக்கு விரைந்தனர். அங்கிருந்த கார்த்திக், ஞானசேகரன் ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பிளஸ்2 மாணவனின் படத்தை, கல்லூரி மாணவியின் படத்துடன் சித்தரித்து மிரட்டியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கார்த்திக், ஞானசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான உதயகுமார், மாணவியின் தாயார் ஆகியோரை தேடி வருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT