ADVERTISEMENT

ஓ....பட்டர்பிளை....பட்டர்பிளை....! சேலம் வனப்பகுதிகளில் அரிய வகை பட்டாம்பூச்சிகள்! ஆய்வில் தகவல்!!

07:22 AM Feb 19, 2020 | santhoshb@nakk…

மழைவளம் பெருக, வனவளம் காப்பது இன்றியமையாததாகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, ஒவ்வொரு மாநிலத்தின மொத்த புவிப்பரப்பளவில் 33.33 சதவீதம் வனப்பரப்பளவு இருக்க வேண்டும் என்கிறது 1988ம் ஆண்டின் தேசிய வனச்சட்டம். மேலும் வனம் என்பது உயிர்ப்பன்மைத்துவம் மிக்க இடமாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அளவுக்கு இன்றைக்கு கடுமையான சட்டங்கள் அமலுக்கு வந்துவிட்டன.

ADVERTISEMENT


உயிர்ப்பன்மைத்துவத்தின் அவசியத்தை உணர்ந்த தமிழ்நாடு வனத்துறை, அவ்வப்போது வனவிலங்குகள், பறவையினங்கள், பூச்சியினங்களை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. சேலம் வனத்துறையிலும் அண்மையில் அவ்வாறு ஒரு கணக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. சேலம் வனக்கோட்டத்தில் தம்மம்பட்டி, ஆத்தூர், கல்வராயன் மலை, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட 9 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் புள்ளி மான், கடமான், கரடி, நரி, காட்டு மாடுகள் மற்றும் சில அரிய வகை பறவைகளும் உள்ளன.

ADVERTISEMENT

இம்மாவட்ட வனப்பகுதிகளில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்புப் பணிகள் பிப். 14ம் தேதி முதல் தொடங்கின. மூன்று நாள்கள் இப்பணிகள் நடந்தன. வனப்பணியாளர்கள் மட்டுமின்றி 150 தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். இக்குழுவினர், 17 பிரிவுகளாக பிரிந்து சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். நவீன கேமராக்கள், பைனாகுலர் உபகரணங்களும் இப்பணியில் பயன்படுத்தப்பட்டன.


கணக்கெடுப்பு பணிகள் குறித்த அறிக்கை, வனத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.


''சேலம் வனப்பகுதியில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய கணக்கெடுப்பு பணிகள் இரண்டாவது முறையாக அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 2018ம் ஆண்டு இதேபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த முறை நடந்த கணக்கெடுப்பில் சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் 276 வகையான பறவை இனங்கள், 76 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டன.

நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் 214 பறவை இனங்களும், 136 பட்டாம்பூச்சி இனங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. பறவை இனத்தில் புதிதாக ஒயிட்ரம்ப்டு ஸ்பைன்டேல் என்ற இனம் புதிதாக கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வகை பறவைகள் கூட்டம் கூட்டமாக இருந்தன. இவற்றில் பத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவை.


அதேபோல் பட்டாம்பூச்சி இனங்களில் சாக்லெட் ஆல்பெட்ரோஸ், பேல்போர்லைன் புளூ, காமன் டின்செல், டிரான்ஸ்பரன்ட் சிக்ஸ் லைன் புளூ ஆகிய நான்கு இனங்கள் புதிதாக கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில் எட்டுக்கும் மேற்பட்ட அரிய வகை பட்டாம்பூச்சி இனங்களும் இருக்கின்றன. காமன் டின்செல் இன பட்டாம்பூச்சிகள், மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகளவில் இருக்கின்றன. இப்போது சேலம் மாவட்ட வனப்பகுதிகளிலும் அவை வந்திருப்பது சிறப்புக்குரியது,'' என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT