ADVERTISEMENT

கொலைக் கருவியான குத்தூசி! சொத்துக்காக தந்தையை 38 முறை குத்திக்கொன்ற மகன்!!

06:46 AM May 26, 2020 | rajavel

ADVERTISEMENT

கிருஷ்ணன் அன்புமணி


சொத்துத் தகராறில் பெற்ற தந்தையையே குடிபோதையில் குத்தூசியால் நெஞ்சில் 38 முறை சரமாரியாக குத்திக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT


சேலம் சூரமங்கலம் சுப்ரமணிய நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (80). ஓய்வு பெற்ற தபால் அலுவலர். இவருக்கு அன்புமணி (45) என்ற மகனும், தேவப்பிரியா என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அன்புமணி, ஆட்டோ ஓட்டி வருகிறார்.


கிருஷ்ணனின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதையடுத்து அவர் மணியம்மாள் (70) என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார்.


அன்புமணிக்கு 17 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த கிருஷ்ணனை ஞாயிறன்று (மே 24) திடீரென்று அன்புமணி சிறிய அளவிலான குத்தூசியால் சரமாரியாகக் குத்தி கொலை செய்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் காவலர்கள் அன்புமணியைக் கைது செய்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கைது செய்யப்பட்ட அன்புமணி காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


நான் பிறப்பதற்கு முன்பே என் தந்தை கிறித்தவ மதத்திற்கு மாறிவிட்டார். என் தாயார் இறந்தவுடன், மணியம்மாள் என்பவரை என் தந்தை சேர்த்துக்கொண்டு தனி வீட்டில் வாழ்ந்து வந்தார்.


ஓய்வு பெற்ற தபால் அதிகாரியான என் தந்தைக்கு மாதம் 22 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வருகிறது. ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். நானோ, வாடகை வீட்டில், இரண்டு குழந்தைகளுடன் ஆட்டோ ஓட்டி, குடும்பம் நடத்தவே முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன். இதையெல்லாம் தெரிந்தும்கூட அவர் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை.


கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, வீட்டிற்கு வருமாறு கூப்பிட்டார். அப்போதுமுதல் அவருடன்தான் வசித்து வருகிறேன். திடீரென்று 2 லட்சம் ரூபாய் கொடுத்து, சொந்தமாக ஆட்டோ வாங்கிக் கொள்ளுமாறு சொன்னார். அந்தப் பணத்தில்தான் இப்போது நான் ஓட்டி வரும் ஆட்டோவை வாங்கினேன்.


இந்த நிலையில்தான் வீட்டையும், அதைச்சுற்றியுள்ள 6 ஆயிரம் சதுரஅடி நிலத்தையும் கிறித்தவ அமைப்புக்கு எழுதிக் கொடுக்கப்போவதாகக் கூறினார். பெற்ற மகனை கஷ்டத்தில் தவிக்கவிட்டுவிட்டு சொத்துகளை தானம் செய்யலாமா எனக்கேட்டு தகராறு செய்தேன். என் புலம்பலை எல்லாம் அவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

சம்பவம் நடந்த அன்று மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தேன். மீண்டும் எங்களுக்குள் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது படுக்கையில் படுத்திருந்த அவரை வீட்டில் இருந்த குத்தூசியை எடுத்து நெஞ்சிலேயே சரமாரியாகக் குத்திக்கொலை செய்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் அன்புமணி கூறியுள்ளார்.


உடற்கூறாய்வில், கிருஷ்ணனின் நெஞ்சு பகுதியில் மட்டும் 38 இடங்களில் குத்தூசியால் குத்தப்பட்ட காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, திங்களன்று (மே 26) மாலை அன்புமணியைக் காவல்துறையினர், நீதிமன்றக் காவலில் சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT