ADVERTISEMENT

சேலம் மக்களவை தொகுதியில் 22 பேர் போட்டி; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

11:08 PM Mar 29, 2019 | elayaraja

ADVERTISEMENT

சேலம் மக்களவை தொகுதியில் 22 பேர் போட்டியிடுவதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி ரோகிணி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT


தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதி ஆகியவற்றுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இத்தேர்தலையொட்டி மார்ச் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. 27ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.


சேலம் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில், விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யாதது, படிவம் 26 சேர்க்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் 12 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று ஒருவரும், இன்று மேலும் 2 பேரும் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.


இதையடுத்து, சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 29, 2019) மாலை, மாவட்ட ஆட்சியரும், சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணி வெளியிட்டார். அதன்படி, இத்தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில், திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், அதிமுக சார்பில் போட்டியிடும் கே.ஆர்.எஸ். சரவணன், அமமுக சார்பில் போட்டியிடும் எஸ்.கே.செல்வம் ஆகியோரிடையேதான் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவர்கள் தவிர, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசா, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சடையன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.


டிடிவி.தினகரனின் அமமுக, தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியாக பதிவு செய்யப்படாததால், அக்கட்சி வேட்பாளர் சுயேச்சை என்றே அறிவிக்கப்பட்டு உள்ளார். இறுதி வேட்பாளர்கள் கொண்ட பட்டியல், அகர வரிசைப்படி தயாரிக்கப்பட்டு உள்ளது. இதே வரிசையில்தான் வாக்குப்பதிவு இயந்திரத்திலும் பொருத்தப்படும். அதன்படி, வேட்பாளர் பெயர் பட்டியலில் முதல் இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சடையன் முதல் இடம் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் கேஆர்எஸ்.சரவணன், மூன்றாவது இடத்தில் திமுகவின் எஸ்.ஆர்.பார்த்திபன் பெயர்கள் இடம் பிடித்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT