ADVERTISEMENT

சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

04:17 PM Feb 27, 2020 | santhoshb@nakk…

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன், 1 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரவீணா, சேலம் எம்.பி பார்த்திபனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அதில், வேட்புமனுவுடன் தாக்கல் செய்த படிவம் 26-ல் வேட்பாளர்கள், குற்ற விபரங்கள், சொத்து உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்க வேண்டும். இந்த விபரங்களை முறையாகச் சமர்ப்பிக்காத பார்த்திபனின் வேட்பு மனுவைத் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது சட்டவிரோதமானது. பார்த்திபன் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும். மீண்டும் சேலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தபோது, பார்த்திபன் தரப்பில், தி.மு.க மக்களவை உறுப்பினரைத் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், தொடர்ந்து விசாரணையைத் தள்ளிவைக்கக் கோருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் மனுதாரரின் இந்தச் செயல் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளுக்கு முரணானது என்பதால் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீநிபதி பி.டி. ஆஷா, தி.மு.க, எம்.பி.பார்த்திபனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT