ADVERTISEMENT

நேற்று கஞ்சா அடிச்சோம்; இன்று விற்கிறோம்! சேலத்தில் சிக்கிய இருவர் பகீர் வாக்குமூலம்!!

08:04 AM Mar 02, 2020 | santhoshb@nakk…

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருவர் கஞ்சா மூட்டைகளுடன் சுற்றித்திரிவதாக, சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப்பிரிவுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலையில் ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, டிஎஸ்பி திருநாவுக்கரசு உத்தரவின்பேரில், ஆய்வாளர் அம்பிகா, எஸ்ஐ சரோஜா, எஸ்எஸ்ஐ முருகன், தலைமைக் காவலர் மணிகண்டன் ஆகியோர் புதிய பேருந்து நிலையம் விரைந்தனர்.

ADVERTISEMENT

அங்கே மதுரை செல்லும் பேருந்துகள் நிற்கும் நடைமேடை அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் சாக்குமூட்டைகளுடன் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜி மகன் ராஜன் (39) என்பதும், கேரளாவைச் சேர்ந்த சசி மகன் ஷியாம்குமார் (39) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் கையில் இரண்டு சிறு சாக்கு மூட்டைகளை வைத்திருந்தனர். அவற்றைப் பிரித்து பார்த்தபோது, கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 22 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்புப்பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2.20 லட்சம் ரூபாய்.


பிடிபட்ட இருவருமே கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் விடுமுறை நாள்களில், போதைக்காக கஞ்சா அடித்து வந்துள்ளனர். நாளடைவில், கஞ்சாவை வாங்கி விற்றால் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்ட அவர்கள், மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, உள்ளூரில் சில்லரை விலையில் விற்பனை செய்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கிலோ 5000 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அங்கிருந்து ரயில் மூலம் சேலம் வந்த அவர்கள், பேருந்து மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கேரளாவுக்குச் சென்று தமிழ்நாடு- கேரளா எல்லையோர பகுதிகளில் கஞ்சா விற்க திட்டமிட்டு இருந்ததாக ராஜன் தெரிவித்துள்ளார். இவர்தான், ஷியாம்குமாரை ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கொடுத்தால் 15 ஆயிரம் ரூபாய் கூலி கொடுப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.


இதையடுத்து ராஜன், ஷியாம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT