ADVERTISEMENT

சேலத்தில் 20 குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி வெட்டி படுகொலை! 

07:30 AM Dec 24, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சேலம் கிச்சிப்பாளையம் சுந்தரர் தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன் மகன் செல்லத்துரை (35). பிரபல ரவுடி. இவர் மீது கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 20 வழக்குகள் உள்ளன. காவல்துறையில் போக்கிரித்தாளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஜான்சிராணியுடன் கிச்சிப்பாளையத்தில் குடும்பம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இரண்டாவது மனைவி சுஜி. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அம்மாபேட்டையில் தனியாக வீடு எடுத்து வசிக்கிறார். அவ்வப்போது செல்லத்துரை வந்து செல்வார்.

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, வெளிமாநிலங்களுக்கு விற்று வந்தார். இவரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். செவ்வாய்க்கிழமை (டிச. 22) இரவு, முதல் மனைவி வீட்டில் இருந்து அம்மாபேட்டையில் உள்ள இரண்டாவது மனைவியைப் பார்ப்பதற்காக செல்லத்துரை காரில் புறப்பட்டுச் சென்றார்.

அவர் கிளம்பிய சிறிது நேரத்தில், அதே வழியில் வந்த ஒரு மர்ம கார், செல்லத்துரையின் கார் மீது பலமாக மோதியது. மர்ம காரில் இருந்து 'திபுதிபு' வென இறங்கிய 13- க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், செல்லத்துரையை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்தனர். தலையிலேயே சரமாரியாக வெட்டினர். மூளை தெறித்து சாலையில் சிதறிக்கிடந்தது. கொலைவெறியைத் தீர்த்துக்கொண்ட அந்த கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் 6 மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் காவல்துறையினர், சம்பவ இடம் விரைந்தனர். வீட்டின் அருகிலேயே கொலை நடந்ததால், மனைவி, உறவினர்கள் சடலத்தைப் பார்த்துக் கதறி அழுதனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, உதவி ஆணையர்கள் மணிகண்டன், ஆய்வாளர்கள் சிவகுமார், சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தீவிர தேடுதல் வேட்டையில், இந்த கொலை தொடர்பாக பிரபல ரவுடி சூரி, அ.தி.மு.க. வார்டு செயலாளர் மேகலா பழனிசாமி உள்பட 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறது காவல்துறை. வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கும்பலுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

பழிதீர்க்கும் நோக்கத்தில்தான் இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சேலம் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் சூரியா. இவர், கடந்த 2015- ஆம் ஆண்டு பிரபல ரவுடி டெனிபாவின் உறவுக்காரப் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த டெனிபா, தன் தம்பிகளுடன் விஜயகுமார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜயகுமார் குத்திக் கொல்லப்பட்டார்.

விஜயகுமார் கொலை வழக்கில் அப்போது சூரியின் மகன்கள் டெனிபா, சிலம்பரசன், ஜீசஸ், குட்டியப்பன், திருநாவுக்கரசு மற்றும் விக்கி, தம்பி ஜெயகுமார், மார்ட்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போதே, தன் தந்தையின் கொலைக்கு பழி தீர்ப்பேன் என்று விஜயகுமாரின் மகன் சூர்யா சபதம் செய்தார். வஞ்சம் தீர்க்க தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். இதற்காகவே ஒரு ரவுடி கோஷ்டியை சேர்த்தார்.

விஜயகுமார் கொலை நடந்த இரண்டு மாதத்தில், சூரியின் மகன் நெப்போலியன் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில், தற்போது கொல்லப்பட்ட ரவுடி செல்லத்துரை, அ.தி.மு.க. பிரமுகர் மேகலா பழனிசாமி, அவருடைய அக்கா மகன் ஜான், சூரியா உள்பட 21 பேர் அப்போது கைது செய்யப்பட்டனர்.

விஜயகுமார் மற்றும் நெப்போலியன் ஆகிய இருவரின் கொலை வழக்குகளிலும் ரவுடி சூரி கோஷ்டியைச் சேர்ந்தவர்களும், செல்லத்துரை கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் சிறைக்குச் சென்றனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, இரு தரப்பும் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள இரு கோஷ்டியினரும் சமாதானமாகப் போய்விட தீர்மானித்தனர். இதற்கு ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட செல்லத்துரை, சூரி மகன்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க செல்லத்துரை தீவிரமாக இருந்தார்.

இந்த நிலையில் செல்லத்துரையின் முக்கிய தளகர்த்தராக இருந்த ஜான் என்பவருக்கும், செல்லத்துரைக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மோதல் இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் கைகலப்பாகவும் மாறியது. இதையடுத்து ஜான், செல்லத்துரையை விட்டுப் பிரிந்து சென்று சூரியின் மகன்கள் அணியில் சேர்ந்து கொண்டார். செல்லத்துரையின் அரிசி கடத்தல் குறித்து அடிக்கடி காவல்துறைக்கும் தகவல் சொல்லி வந்தார்.

இதற்கிடையே, செல்லத்துரையை தீர்த்துக்கட்ட ஜான், சூரி கோஷ்டியினர் தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி, நீண்டகாலமாக திட்டமிட்டு வந்த அவர்கள் டிச.22- ஆம் தேதி, செல்லத்துரையை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொடூரமாக வெட்டி சாய்த்திருக்கிறார்கள்.


சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் 500- க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும்பாலான கேமராக்கள் இயங்கவில்லை. நேற்று சம்பவ இடம் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய காவல்துறையினர் சென்றனர். அப்போதுதான், அங்கு பொருத்தப்பட்டு இருந்த 3 கேமராக்களும் கடந்த 4 மாதமாக செயல்படவில்லை என்பது தெரிய வந்தது. கரோனா ஊரடங்கு காலத்தில் கேமராக்களை எதற்கு தேவையில்லாமல் இயக்கி மின்சார செலவு செய்ய வேண்டும் எனக்கருதி, கேமரா பராமரிப்பாளர்கள் கேமராக்களை ஆப் செய்து விட்ட அதிர்ச்சி தகவல்களும் தெரிய வந்தது.

பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக நடந்த இந்த கொலை சம்பவம் கிச்சிப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வாழையடி வாழையாக...:


கொல்லப்பட்ட செல்லத்துரையின் தந்தை புருஷோத்தமன். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு அடிதடி, கொலை வழக்குகளில் ஈடுபட்ட ரவுடியாக இருந்தார். இவருடைய சகாவான சூரியும் அப்போது பெரிய ரவுடி. இவர்கள் இருவரும்தான் கிச்சிப்பாளையத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். புருஷோத்தமன், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவருடைய மகனான செல்லத்துரையும் பின்னாளில் ரவுடியாக உருவெடுத்தார். அரசியல் கட்சிகளின் பின்னணியிலும் செயல்பட்டார்.

சூரியின் மகன்களான டெனிபா, ஜீசஸ், குட்டியப்பன், சிலம்பரசன், திருநாவுக்கரசு ஆகியோரும் ரவுடிகளாக வளர்ந்தனர். இவர்கள்தான் செல்லத்துரை கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT