ADVERTISEMENT

டெம்போ மீது லாரி மோதி விபத்து; சிறுவன் உள்பட 2 பேர் பலி! 15 தொழிலாளிகள் பலத்த காயம்!!

07:45 AM Dec 16, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே, கூலித்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியாயினர். 15 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்த 20 கூலித்தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை (டிச. 15) காலை சாலைப்பணிக்காக காடையாம்பட்டிக்கு ஒரு டெம்போ வாகனத்தில் கிளம்பிச் சென்றனர். அந்த வாகனத்தை பழனிசாமி என்பவர் ஓட்டிச்சென்றார்.

சேலம் & பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குப்பூர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் சாலையைக் கடந்துள்ளார். அப்போது அவர் மீது மோதாமல் இருப்பதற்காக டெம்போ வாகனத்தைச் சாலையின் வலப்பக்கமாக ஓட்டுநர் திருப்பியுள்ளார். அதேநேரத்தில் பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த லாரி, டெம்போ வாகனம் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் டெம்போ, நடு சாலையில் கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் வந்த கூலித்தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும், ஓமலூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை வேகப்படுத்தினர். பலத்த காயம் அடைந்த 17 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மணிகண்டன் என்ற நான்கு வயது சிறுவனும், மெய்வேல் (60) என்பவரும் இறந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீட்டில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள்கள் இல்லாததால், சிறுவன் மணிகண்டனை பெற்றோர் வேலைக்குச் செல்லும் இடத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளனர். செல்லும் வழியில்தான் விபத்தில் சிறுவன் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. காயம் அடைந்தவர்களுள் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டெம்போ மீது லாரி பயங்கரமாக மோதியதில், டெம்போவின் முன்பக்க சக்கரங்கள் கழன்று ஓடின. விபத்தில், டெம்போ வாகனம் முழுமையாக உருக்குலைந்தது.

விபத்து காரணமாக, சம்பவம் நடந்த சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினரின் நடவடிக்கைக்குப் பிறகு போக்குவரத்து நெரிசல் சீரடைந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT