ADVERTISEMENT

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற ரவுடிகள் மீது குண்டாஸ் பாய்ந்தது!

07:28 AM Mar 01, 2020 | santhoshb@nakk…

ஓசூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சத்தியமூர்த்தி. இவரை சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் மகன் டாக் பாபு என்கிற பாபு (30), அவருடைய கூட்டாளியான மரவனேரி ஐஸ்வர்யம் கார்டனை சேர்ந்த சரவணன் மகன் கார்த்திக் என்கிற சுபாஷ் (26) ஆகியோர் மேலும் சில கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த ஜனவரி 11- ஆம் தேதி கடத்திச்சென்று சாரமாரியாக தாக்கியதோடு, 11 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், அந்த கும்பலை கூண்டோடு கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT

மேற்சொன்ன இருவர் மீதும் மல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ்வரன் என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி 1450 ரூபாய் பறித்துக் கொண்டதாகவும் ஒரு வழக்கு கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் உள்ளது தெரிய வந்தது.


இவர்களில் பாபு மீது கடந்த 2017- ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவரை கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்ததாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் ஒருமுறை கைது செய்துள்னர். அந்த வழக்கில் இருந்து பிணையில் விடுதலையான அவர் குகை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை வழிமறித்து 3000 ரூபாய் பறித்துக்கொண்ட புகாரின்பேரில் செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினரும் கைது செய்துள்ளனர். அதேபோல் கார்த்திக் என்கிற சுபாஷ் மீதும், கடந்த 2018ல், கார் மோசடி தொடர்பாக மதுரை எஸ்எஸ் காலனி காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவாகி உள்ளன.


இவர்கள் இருவரும் சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்ட காவல்துறை ஆணையர் செந்தில்குமார் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டாக் பாபு, கார்த்திக் ஆகிய இருவரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை காவல்துறையினர் பிப். 29- ஆம் தேதி சார்வு செய்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT