ADVERTISEMENT

குடும்பச்செலவுக்கு காசில்ல...குடிப்பதற்கு மட்டும் ஏது பணம்? கேள்வி கேட்ட மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கணவன்!

07:23 AM Apr 01, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் அருகே, ‘குடும்பச் செலவுக்கு கேட்டால் பணம் இல்லை என்கிறீர்கள்; மது குடிப்பதற்கு மட்டும் எங்கிருந்து பணம் வருகிறது?’ என்று கேள்வி கேட்ட மனைவியை, கணவன் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள ஆணைக்கவுண்டர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 31). சேலத்தில் தையல்காரராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 29). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

விஜயகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. சம்பாதிக்கும் பணத்தை மது குடிப்பதற்காக அதிகமாக செலவு செய்து வந்துள்ளார். குடும்பச் செலவுகளுக்கும் சரியாக பணம் தருவதில்லை.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 30) இரவு, மது போதையில் விஜயகுமார் வீடு திரும்பியுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி, 'குடும்பச் செலவுக்கு கேட்டால் பணம் இல்லை என்கிறாய்... குடிப்பதற்கு மட்டும் எங்கிருந்து பணம் கிடைக்கிறது?' எனக் கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதில், அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு, கோபம் தணிந்து, ஈஸ்வரி தூங்கச் சென்றுவிட்டார். பலர் முன்னிலையில் மனைவி தன்னை கேள்வி கேட்டு அசிங்கப்படுத்திவிட்டதாகக் கருதிய விஜயகுமார், தூங்கிக்கொண்டிருந்த ஈஸ்வரியின் கழுத்தைக் கயிற்றால் நெரித்தார்.

இதனால் ஈஸ்வரி மூச்சுப்பேச்சின்றி கிடந்தார். பின்னர் விஜயகுமாரே, நங்கவள்ளி காவல் நிலையத்திற்குச் சென்று, குடிபோதையில் தன் மனைவியின் கழுத்தைக் கயிற்றால் நெரித்துவிட்டதாகவும், அவர் என்ன ஆனார் என தெரியவில்லை என்றும் கூறி, சரணடைந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மருத்துவர்களை அழைத்து வந்து பரிசோதனை செய்து பார்த்தபோது, படுக்கையில் ஈஸ்வரி சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. விஜயகுமார் கயிற்றால் நெரித்ததால் அவர் இறந்துள்ளார்.

சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நங்கவள்ளி காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT