ADVERTISEMENT

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி வசூல் வேட்டை; எஸ்ஐ, ஏட்டு பணியிடைநீக்கம்!

12:18 AM Feb 15, 2020 | santhoshb@nakk…

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி 900 ரூபாய் வசூலித்த, சிறப்பு எஸ்ஐ மற்றும் தலைமைக் காவலர் ஆகியோரை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து, மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT


சேலம் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி வருபவர் சுப்ரமணி. அதே காவல்நிலையத்தில், கணேசன் என்பவர் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.

ADVERTISEMENT


கடந்த ஜனவரி மாத இறுதியில், பெரிய கொல்லப்பட்டி பகுதியில் இருவரும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக செல்போனில் பேசியபடி ஆட்டோ ஓட்டி வந்த ஒருவரை மடக்கினர். அவரிடம் விசாரணை நடத்தியதில், வாகன பதிவுச்சான்றிதழ் இல்லை என்பதோடு, காக்கி சீருடையும் அணியாமல் இருந்தார். செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டி வந்தார். இதனால் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆட்டோ வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


இதையடுத்து, வழக்குதான் பதிவு செய்துவிட்டீர்களே... பிறகு எதற்காக ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளீர்கள். ஆட்டோவை மட்டும் விடுவித்து விடுமாறு அவர் காவல்துறையினரிடம் முறையிட்டார். ஆட்டோவை விடுவிக்க வேண்டுமானால், 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சிறப்பு எஸ்.ஐ.,யும், தலைமைக் காவலரும் கூறினர்.


இதுகுறித்து அவர்களிடையே நடந்த உரையாடல் தொடர்பான காணொலிக்காட்சி, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவின. பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி உதவி ஆணையர் ஆனந்த்குமாருக்கு, மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். விசாரணையில் அவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநரிடம் 900 ரூபாய் லஞ்சம் வசூலித்திருப்பது உறுதியானது. விசாரணை அறிக்கையை உதவி ஆணையர் ஆனந்த்குமார் ஆணையரிடம் சமர்ப்பித்தார்.


இதையடுத்து, கன்னங்குறிச்சி சிறப்பு எஸ்.ஐ., சுப்ரமணி, தலைமைக் காவலர் கணேசன் ஆகிய இருவரையும் உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இச்சம்பவம், சேலம் மாநகர காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT