ADVERTISEMENT

சாலையோர காய்கறி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை! பலநாள் படையெடுப்புக்குப் பின் கடை வைக்க அனுமதி!!

08:03 AM Jun 08, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சேலத்தில், சாலையோர காய்கறி வியாபாரிகள், வணிக வளாகத்திற்குள் கடை வைக்க அனுமதி கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT


சேலம் வ.உ.சி. சந்தை, முதல் அக்ரஹாரம் மற்றும் ஆற்றோரம் பகுதிகளில் 350- க்கும் மேற்பட்ட சாலையோர காய்கறி வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர். கடந்த மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் கரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் விற்பனைக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டது.

நோய்த்தொற்று அபாயம் காரணமாக ஆற்றோரம், வ.உ.சி. சந்தை, அக்ரஹாரம் பகுதிகளில் இயங்கி வந்த காய்கறி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. அப்பகுதிகளில் கடை நடத்தி வந்தவர்களில் 100 பேருக்கு மட்டும் சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் காய்கறி கடை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதனால், கடை நடத்த அனுமதி கிடைக்காத மற்ற 250- க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டது.


இதற்கிடையே, கடந்த மே மாத மத்தியில் ஊரடங்கு விதிகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன. ஜூன் முதல் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி கடைகள், அருகில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டது. புதிய இடத்திற்குக் காய்கறி கடைகள் மாற்றப்பட்ட பிறகும், ஏற்கனவே கடை நடத்த அனுமதிக்கப்பட்ட அதே 100 வியாபாரிகளுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தமுறையும் தங்களுக்கான வாய்ப்பு கைநழுவிப் போனதே என்று மற்ற காய்கறி வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் வணிக வளாகத்தில் கடை நடத்தவும், மாற்று இடங்களை ஒதுக்கக்கோரியும் சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) முற்றுகையிட்டனர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் மண்டல அலுவலக வளாகத்தில் குழுமி இருந்ததைப் பார்த்தும் அங்கிருந்து மாநகராட்சி ஊழியர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

ஒருபக்கம், மாநகராட்சி ஆணையர் சதீஸ், தன் கவனத்திற்கு வரும்பட்சத்தில் சமூக இடைவெளி விதி, முகக்கவசம் அணிதலை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். மீறுவோருக்கு அந்த இடத்திலேயே அபராதமும் விதிக்கிறார். அதேநேரம், அவருக்குக் கீழ் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் சமூக இடைவெளியின்றி குழுமி இருக்கும் மக்களைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தனர்.


இது தொடர்பாக சாலையோர வியாபாரிகள், சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கே.டி.ராஜூ, கன்னியம்மாள், புவனேஸ்வரி, முருகன் ஆகியோர் நம்மிடம் பேசினர். ''சேலம் ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட சாலையோர காய்கறி வியாபாரிகள் கடை நடத்தி வந்தோம். கரோனா ஊரடங்கு அமலான பிறகு எங்களை எல்லாம் ஒரே நாளில் மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனால் எல்லோருக்கும் மாற்று இடம் ஒதுக்காமல், வெறும் 100 பேருக்கு மட்டும் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் காய்கறி கடை போட டோக்கன் வழங்கினர்.

காய்கறி மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் கஜேந்திரன் என்பவர் தனக்கு வேண்டப்பட்ட காய்கறி கடைக்காரர்களிடம் ஒவ்வொருவரிடம் இருந்தும் 1,500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கையூட்டு வசூலித்துக்கொண்டு, அவர்களுக்கு மட்டும் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் கடை நடத்த அனுமதித்துள்ளார். இதைப்பற்றி, அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல அலுவலக அதிகாரிகளிடம் கேட்டால், கஜேந்திரன்தான் சுங்க வசூலிக்கும் ஒப்பந்தம் எடுத்திருக்கிறார். எதுவாக இருந்தாலும் அவரைப் போய் கேளுங்கள் என்று சொல்லி விரட்டுகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ளதால் காய்கறி வியாபாரிகளிடம் சுங்கம் வசூலிக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி கஜேந்திரன், எங்களிடம் கடைக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கிறார். ஒரு கடையில் இரண்டு பேர் இருந்தால், இரண்டு கடையாகக் கருதி சுங்கக்கட்டணம் வசூலிக்கிறார். இதையெல்லாம் மாநகராட்சிக்கு தெரிந்தும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை.


ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் வந்த பிறகும்கூட ஏற்கனவே கடை போட அனுமதித்த அதே 100 பேருக்குதான் இப்போதும் தொடர்ந்து கடை நடத்த அனுமதிக்கின்றனர். பழைய பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து வணிக வளாகத்திற்கு காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கே, அனைத்து சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கும் கடை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

அந்த 100 பேருக்கு மட்டுமின்றி, எங்களுக்கும் வயிறு இருக்கிறது என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை என்று சுழற்சி முறையிலாவது அனைத்துக் காய்கறி வியாபாரிகளுக்கும் கடை நடத்த அனுமதிக்க வேண்டும். நாங்களும் எங்கள் கோரிக்கை தொடர்பாக அம்மாபேட்டை மண்டல அலுவலகத்திற்கு கடந்த பத்து நாள்களாக நடந்து கொண்டிருக்கிறோம். இன்று வா, நாளை வா என அலைக்கழிக்கிறார்களே தவிர, கடை வைக்க டோக்கன் தர மறுக்கின்றனர். இந்த மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராக இருக்கும் சுரேஷ் என்பவர் இன்று (ஞாயிறு) டோக்கன் தருவதாகச் சொன்னதன் பேரில்தான் வந்தோம். ஆனால் இப்போதோ அவர், நாளை வாருங்கள் எனச் சொல்கிறார்,'' என்றனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்ற முதியவர், குடும்பத்தை விட்டு பஞ்சம் பிழைப்பதற்காக சேலம் வந்து, இங்கு வ.உ.சி. சந்தையில் வெங்காயம், உருளைக்கிழங்கு விற்று வருகிறார். ஊரடங்கு பெயரால் தனக்கு காய்கறி கடை வைக்க அனுமதி கிடைக்காததால், மற்ற கடைக்காரர்களிடம் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். லாரியில் இருந்து ஒரு கிரேடு தக்காளியை இறக்கினால் பெட்டிக்கு 10 ரூபாய் கூலி கிடைக்கும் என்கிறார் அவர். அதை வைத்துதான் ஊரடங்கு காலத்தில் பசியாறியதாகச் சொல்கிறார்.

காய்கறி கடை வைக்க இன்றாவது அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இரும்பாலையைச் சேர்ந்த மூதாட்டி பெரியக்காள் (75), தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்த பழனியம்மாள் (65) ஆகியோர் சேலத்திற்கு வந்து பழைய பேருந்து நிலைய வளாகம், ஆற்றோரம் காய்கறி சந்தை சாலையிலேயே இரவில் படுத்துக் கொள்வதாகவும், கடை அனுமதிக்காக பல நாள்களாக மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு நடையாய் நடப்பதாகவும் சொன்னார்கள்.


''மேச்சேரியைச் சேர்ந்த மாலா என்பவர், காய்கறி கடையை நம்பித்தான் வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறேன். இந்த வருமானத்தை வைத்துதான் கடனை அடைக்க வேண்டும். அதனால் சேலம் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கும் முன்புபோல் கடை வைக்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

காய்கறி கடை வைக்க டோக்கன் வழங்கப்படுவதாக கேள்விப்பட்டு, அம்மாபேட்டை மண்டல அலுவலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே 300- க்கும் மேற்பட்ட சாலையோர காய்கறி வியாபாரிகள் வந்துவிட்டனர். கூட்டத்தை விட்டு வெளியே சென்றால் டோக்கன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், மூதாட்டிகள் உள்பட பலரும் காலை முதல் இரவு வரை வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துவிட்டு பட்டினியுடன் அந்த வளாகத்திலேயே காத்துக் கிடந்துள்ளனர்.

இதுபற்றி அம்மாபேட்டை மண்டல வருவாய் ஆய்வாளர் சுரேஷிடம் கேட்டோம். ''மாநகராட்சி வணிக வளாகத்திற்குள் சமூக இடைவெளி வேண்டும் என்பதற்காகத்தான் முதல்கட்டமாக 100 காய்கறி வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதுவரை கடை நடத்த அனுமதி கிடைக்காதவர்களுக்கு ஒரு வாரம் கடை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். அதற்கான டோக்கன்கள் தயாராக இருக்கின்றன. நாளை (திங்கள்) காலையில் பட்டுவாடா செய்து விடுவோம்.


இதுவரை கடை வைத்திருந்தவர்களுக்கு திங்கள் முதல் அனுமதி கிடையாது. அனைத்துக் காய்கறி வியாபாரிகளுக்கும் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். காய்கறி கடைக்காரர்கள் தாங்களாகவே தினமும் இங்கு வந்து செல்கிறார்களே தவிர, அவர்களைத் தினமும் நேரில் வந்து பார்க்கும்படி யாருமே சொல்லவில்லை,'' என்றார் சுரேஷ்.


இதையடுத்து இரவு 06.45 மணியளவில் வருவாய் ஆய்வாளர் சுரேஷ் மண்டல அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும்போது, அவரை காய்கறி வியாபாரிகள் சூழ்ந்து கொண்டு கடை நடத்துவதற்கான அனுமதி டோக்கன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரினர். நாளை காலையில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறினார். ஆனால் பலரும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், பின்னர் அனுமதி டோக்கன்களை அவரும், மற்ற ஊழியர்களும் வழங்கினர்.

அடுத்த ஞாயிறு முதல் காய்கறி நடத்த அனுமதி வேண்டுவோரிடம் இருந்து சாலையோர வியாபாரி என்பதற்கான அடையாள அட்டை நகலைப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து காய்கறி வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாறான தகவல்!


இந்நிலையில், காய்கறி வியாபாரிகளிடம் 1500 முதல் 5,000 ரூபாய் வரை கையூட்டு பெற்றுக்கொண்டு கடை நடத்த அனுமதி வழங்கியதாக புகார் கூறப்பட்ட சேலம் மாகராட்சி குத்தகைதாரர் கஜேந்திரன் என்பவரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம்.


கஜேந்திரன் நம்மிடம், ''காய்கறி வியாபாரிகளிடம் கடை நடத்த அனுமதிப்பதற்காக நான் யாரிடமும் கையூட்டு வாங்கவில்லை. சேலம் மாநகராட்சியில் ஆற்றோரம் காய்கறி சந்தையை சுங்கம் வசூலிப்பதற்காக எனக்கு வழங்கப்பட்டிருந்த குத்தகை உரிமக் காலம் கடந்த 31.3.2020ம் தேதியுடன் முடிந்து விட்டது. அதன்பின், எனக்கும் சேலம் மாநகராட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லாதபோது நான் காய்கறி வியாபாரிகளிடம் கையூட்டு பெற்றதாகச் சொல்வதில் கொஞ்சமும் அடிப்படை உண்மை இல்லை. காய்கறி வியாபாரிகள் என்னைப்பற்றி தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். உண்மையில், ஆற்றோரம் காய்கறி சந்தையை குத்தகை எடுத்ததில் எனக்கு பல லட்சம் ரூபாய் நட்டமும், மன உளைச்சலும்தான் ஏற்பட்டுள்ளது,'' என விளக்கம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT