ADVERTISEMENT

கபடதாரி ஓ.பி.எஸ்.! சேலத்தில் பரபரப்பு போஸ்டர்!!

08:06 AM Jul 07, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT



அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமைக்கான போட்டி வலுத்துள்ள நிலையில், சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை 'கபடதாரி' என்று விமர்சித்து, மர்ம நபர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

அ.தி.மு.க.வில் தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ஒழித்துவிட்டு, ஒரே தலைமையின் கீழ் கட்சியைக் கொண்டு வரும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளது.

கட்சியிலும், சட்டமன்றத்திலும் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ள நிலையில், அவரையே கட்சியின் புதிய பொதுச்செயலாளராக கொண்டு வர வேண்டும் என்றும், இனி அ.தி.மு.க. அவருடைய ஒரே தலைமையின் கீழ் இயங்கும் என்றும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

பொதுக்குழு உறுப்பினர்களிலும் பெரும்பான்மை ஆதரவு இ.பி.எஸ்.க்கு உள்ளது. என்றாலும், தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சிலர் அப்பகுதிகளில் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சேலம் மாவட்டத்தில் இ.பி.எஸ். ஆதரவாளர்களும் போஸ்டர் யுத்தத்தில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், 'தேசிய மக்கள் இயக்கம், நிலவாரப்பட்டி' என்ற பெயரில், சேலம் மாநகரில் பல இடங்களில் ஓ.பி.எஸ்.ஸை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஓ.பன்னீர்செல்வத்தை அரசியல் ரீதியாக விமர்சித்து இ.பி.எஸ். தரப்பினர் போஸ்டர்கள் ஒட்டி வந்த நிலையில், திடீரென்று அவர் மீது சாதி ரீதியான தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

சமீபத்தில் சேலத்தில் தேசிய மக்கள் இயக்கத்தின் பெயரில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரில், 'தேசியம் தெய்வீகம் எனது இரு கண்கள் என தன் வாழ்நாளையே தமிழகத்திற்காக அர்ப்பணித்தவர் பசும்பொன் தேவர். வீரம் செறிந்த எமது தென்னகத்து தேவர் இன சொந்தங்களை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் கபடதாரியை அடையாளம் காண்பீர்.

தெய்வீக தேவர் இன மக்கள் ஒருபோதும் இந்த கபடதாரியை நம்ப மாட்டார்கள்,' என்று குறிப்பிட்டு, அதன் அருகில் ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை அச்சிட்டு அதில் பெருக்கல் குறியும் போட்டுள்ளனர். அதே போஸ்டரில், ஜெயலலிதா, இ.பி.எஸ். ஆகியோர் முத்துராமலிங்கத் தேவரை வணங்கும் படங்களும் அச்சிடப்பட்டு உள்ளன.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த போஸ்டர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், தேசிய மக்கள் இயக்கம் என்ற ஓர் அமைப்பே இல்லை என்பதும், இரவோடு இரவாக மர்ம நபர்கள் நகரின் முக்கிய இடங்களில் ஒட்டிவிட்டுச் சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. போஸ்டரில், அச்சகத்தின் பெயர், தொடர்பு எண்களும் அச்சிடப்படவில்லை.

சர்ச்சைக்குரிய இந்த போஸ்டர்களை உண்மையில், எடப்பாடியின் ஆதரவாளர்கள்தான் ஒட்டினார்களா? அல்லது, அ.தி.மு.க.வில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்த வேறு யாரேனும் ஓ.பி.எஸ்க்கு எதிராக போஸ்டர்களை ஒட்டினார்களா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போஸ்டர்கள் ஒட்டப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT