ADVERTISEMENT

சேலம் மாநகராட்சி: 9 வார்டுகளில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் பறிபோனது!

08:13 AM Feb 24, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 9 வார்டுகளில் கட்டுத்தொகை பறிபோன பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு, ஆளும் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் மரண அடி கொடுத்துள்ளது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய சொந்த மண்ணிலேயே படுதோல்வி அடையச் செய்துள்ளது. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 7 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் இரண்டு வார்டுகளில் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, 9 வார்டுகளில் அ.தி.மு.க. கட்டுத்தொகையை பறிகொடுத்துள்ள பரிதாபமும் நடந்துள்ளது. அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கீதா (1389 வாக்குகள்) கட்டுத்தொகை இழந்துள்ளார். அதேபோல், 13வது வார்டில் சீனிவாசன், 14வது வார்டில் பழனிசாமி, 20வது வார்டில் சுதா, 31வது வார்டில் மோகன், 32வது வார்டில் யாஸ்மின் பானு, 42வது வார்டில் சுமதி, 43வது வார்டில் மோகன்ராஜ், 44வது வார்டில் கெஜிராமன் ஆகியோரும் கட்டுத்தொகையை இழந்துள்ளனர்.

மொத்தம் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே வேட்பாளர் செலுத்திய கட்டுத்தொகையைத் திரும்பப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுத்தொகையை இழந்தது மட்டுமின்றி, 33வது வார்டில் சரோஜா, 50வது வார்டில் பரமசிவம் ஆகியோர் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டனர். 32வது வார்டில் போட்டியிட்ட யாஸ்மின் பானு 932 வாக்குகள் மட்டுமே பெற்று, 5006 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மண்டலக்குழுத் தலைவர்களும் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். தேர்தலுக்கு முன்பு, முன்னாள்கள் எப்படியும் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தேர்தல் முடிவுகளோ அந்த எதிர்பார்ப்பையும் தகர்த்துள்ளது. சேலம் மாநகராட்சியில் மண்டலக்குழு முன்னாள் தலைவர்களான தியாகராஜன் (1வது வார்டு), அசோக்குமார் (2வது வார்டு), தொடர்ந்து நான்கு முறை கவுன்சிலராக வெற்றி பெற்று வந்த ஏகேஎஸ்எம்.பாலு (3வது வார்டு), ராஜேந்திரன் (26வது வார்டு), சண்முகம் (57வது வார்டு) ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

சேலம் எங்கள் கோட்டை என அ.தி.மு.க. திடமாக நம்பி வந்த நிலையில், இந்த தேர்தலில் திமுக அந்தக் கோட்டையை தகர்த்து எறிந்து தன் வசப்படுத்தி உள்ளது. அதிமுகவின் விஐபிக்களும் தோல்வி அடைந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT