ADVERTISEMENT

தூங்கி எழுந்த சேலம் மாநகராட்சி கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி

11:59 AM Feb 04, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சி ஆணையருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சேலம் மாநகராட்சி ஆணையராக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துராஜ், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு, அலுவல் பணிகளை முடித்துவிட்டு இரவு வழக்கம்போல் படுக்கைக்குச் சென்றவர், மறுநாள் அதிகாலையில் எழுந்தவருக்கு கடுமையாக உடல் வியர்த்துக் கொட்டியுள்ளது. அப்போது திடீரென்று வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதைக்கண்டு பதற்றம் அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு இசிஜி, சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனையில், அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் வடக்கு திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, கண்காணிப்பாளர் தனபால் மற்றும் மருத்துவக் குழுவினரிடம் மாநகராட்சி ஆணையருக்கு அளித்து வரும் சிகிச்சை தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பையொட்டி மாநகராட்சி ஆணையர், கடந்த சில நாட்களாகவே தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி, ஆலோசனைக் கூட்டங்களை தீவிரமாக நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT