ADVERTISEMENT

போலி நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிப்பு; அரசுப் பள்ளி ஆசிரியரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி  

10:59 AM Jun 08, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மனைவிக்கு ஜீவனாம்ச தொகையைத் தனது சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற போலி உத்தரவு நகல்களை சமர்ப்பித்த வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் சரவணன் (45) அரசுப்பள்ளி ஆசிரியர். இவருடைய முதல் மனைவி கலா. கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், கலாவுக்கு ஆசிரியர் சரவணனின் ஊதியத்தில் இருந்து மாதம்தோறும் ஜீவனாம்சத்திற்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சரவணன், ஆத்தூர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தின் பேரில் ஒரு உத்தரவு நகலை, அவர் முன்பு பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். அந்த உத்தரவு நகலில், சரவணனின் முதல் மனைவி கலாவுக்கு தனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஜீவனாம்ச தொகையை அவர் கோரவில்லை. எனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதேபோல, தற்போது பணியாற்றி வரும் எலவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அதே நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற ஒரு உத்தரவு நகலை சமர்ப்பித்தார். அந்த உத்தரவில், முதல் மனைவி கலாவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஜீவனாம்சமாக மாதம் 9000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் ஜீவனாம்ச தொகை வேண்டாம் என்று கலா சொல்லிவிட்டார். எனவே, 2022 ஆம் ஆண்டு முதல் சரவணனுடைய சம்பளத்தில் ஜீவனாம்ச தொகை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த இரு உத்தரவு நகல்களின் மீதும் இரண்டு தலைமை ஆசிரியர்களுமே சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து உத்தரவின் உண்மைத்தன்மை குறித்து அறிய அவற்றை ஆத்தூர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு அனுப்பி வைத்து விவரம் கோரினர். இந்த உத்தரவு நகல்களை ஆய்வு செய்த நீதிமன்ற எழுத்தர் செல்வி, இப்படி ஒரு உத்தரவை ஆத்தூர் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்றும், இவை இரண்டுமே போலியானவை என்றும் கூறினார்.

மேலும் செல்வி, இது தொடர்பாக ஆசிரியர் சரவணன் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் கடந்த ஆண்டு சரவணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆசிரியர் சரவணன், முன்ஜாமீன் கோரி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தம்பிதுரை ஆட்சேபனை தெரிவித்தார். ஆசிரியரே மோசடியாக நீதிமன்ற உத்தரவுகளை தயாரித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. அதனால் அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி சுமதி, ஆசிரியர் சரவணனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்ய ஆத்தூர் நகர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT