ADVERTISEMENT

அ.தி.மு.க. பெண் பிரமுகரைக் கொன்றது ஏன்? கைதானவர் பகீர் வாக்குமூலம்!

06:23 AM May 22, 2020 | rajavel

ADVERTISEMENT


அ.தி.மு.க. பெண் பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி சாந்தா (50). ஸ்டார்ச் மாவு வியாபாரம் செய்து வந்தார். பனைமரத்துப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. மகளிர் அணி தலைவராகவும், பெரமனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்களுள் ஒருவராகவும் இருந்து வந்தார்.


சாந்தாவின் மருமகள் வைத்தீஸ்வரி. இவர், பனைமரத்துப்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து இல்லாததால், வேலை முடிந்து வீடு திரும்பும் மருமகளை தானே இருசக்கர வாகனத்தில் நேரில் சென்று அழைத்து வந்துள்ளார்.


புதன்கிழமை (மே 20) மாலை 6 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தில் மருமகளை அழைத்து வருவதற்காக பனைமரத்துப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் மாமியார் வராததால் சந்தேகம் அடைந்த வைத்தீஸ்வரி, வீட்டில் இருக்கும் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.


இது ஒருபுறம் இருக்க, பனைமரத்துப்பட்டி செல்லும் வழியில் ஓரிடத்தில் சாந்தா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். மர்ம நபர்கள் அவரை வயிறு, மார்பு, தலை ஆகிய இடங்களில் தாக்கியிருப்பதும், அதனால் ரத்தக்காயங்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது.


அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து மல்லூர் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். ஆய்வாளர் அம்சவள்ளி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தி போன்ற கூர்மையான ஆயுதம் மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பதும், மாலை 5.20 மணி முதல் 5.30 மணிக்குள் கொலை நடந்திருக்கலாம் என்பதும் உடற்கூறாய்வில் தெரிய வந்தது.


எஸ்.பி. தீபா கனிகர், புறநகர் டி.எஸ்.பி. உமாசங்கர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.


காவல்துறை விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சாந்தா கொல்லப்பட்டதன் பின்னணியில் ஊர் மக்களின் ஒட்டுமொத்த சந்தேகமும் மல்லூர் எஸ்.ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவருடைய மகன் ரமேஷ் (26) என்பவர் மீது இருந்தது. இருவருமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி உறவினர்கள்தான் என்கிறார்கள். ரமேஷை உள்ளூரில் கழுதை பாலு என்றும் பட்டப்பெயரிட்டு அழைக்கின்றனர். அவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.


அவருக்கும் சாந்தாவுக்கும் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே முன்விரோதம் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இந்தக் கொலைக்கு நான்கு முக்கிய 'மோட்டிவ்'கள் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கினர்.


கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, சாந்தா வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவருக்குச் சொந்தமான ஆட்டோ ஒன்று திடீரென்று காணாமல் போனது. இதுபற்றி சாந்தா மல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் ரமேஷ் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தப் புகார் அளித்த அடுத்த இரு நாள்களில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆட்டோ, அப்பகுதியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ஆட்டோவை மீட்டு சாந்தாவிடம் ஒப்படைத்தனர். எனினும் ஆட்டோ மாயமானதற்கும் ரமேஷூக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரம் இல்லாததால் காவல்துறையினரும் அப்போது வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் சாந்தா மீது ரமேஷூக்கு கடும் ஆத்திரம் இருந்தது.


இதுமட்டுமின்றி ரமேஷ், கள்ளச்சாராயம் விற்பதாகவும், உள்ளூரில் நடக்கும் அத்தனை ரவுடித்தனங்களுக்கும் ரமேஷ்தான் காரணம் என்றும், அவர் கூலிப்படை ரவுடி என்றும் சாந்தா அடிக்கடி அவர் மீது புகார் கூறி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், அவர் மீது 'ஹிஸ்டரி ஷீட்' பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறும் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார் என்கிறார்கள்.


அவர்களுக்குள் மற்றொரு சம்பவமும் முன்விரோதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரமேஷின் பெரியப்பா முருகேசன் தற்போது சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் 1,000 ரூபாய் கரோனா நிவாரண நிதியுதவி வழங்கியது. நிவாரணத் தொகையை வழங்கும் திட்டத்தை சாந்தா முன்னின்று துவக்கி வைத்திருக்கிறார். அப்போது ரமேஷ், எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீங்கள் எப்படி நிவாரண உதவி வழங்கலாம் எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருதரப்புக்கும் பெரிய அளவில் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. பலர் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.


ரமேஷ் மீது சாந்தாவுக்கு விரோதம் ஏற்பட வேறு ஒரு முக்கியமான மோட்டிவ் இருந்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. அதாவது, சாந்தாவின் அண்ணன் மகள் உமாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் அவர் கணவரை பிரிந்து மல்லூரில் வாழ்ந்து வருகிறார். அவருடன் ரமேஷூக்கு 'நெருக்கமான உறவு' இருந்து வந்திருக்கிறது. அண்ணன் மகளுடனான தொடர்பை விட்டுவிடுமாறு சாந்தா பலமுறை எச்சரித்தும், கேட்காததால்தான் அவர் மீது காவல்துறையிடம் அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்லி வந்திருக்கிறார் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.


இந்த நிலையில்தான் ரேஷன் கடையில் நிவாரண நிதி வழங்கிய அன்று ஏற்பட்ட மோதல் அவர்களிடையே யார் முதலில் தீர்த்துக்கட்டுவது என்ற கடுமையான விரோதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சாந்தாவும் கூலிப்படையை வைத்து ரமேஷை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் சொல்கிறார்கள். அதற்குள் ரமேஷ் முந்திக்கொண்டு சாந்தாவைக் கொலைசெய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


சம்பவத்தன்று அவரை தீர்த்துக்கட்டிய ரமேஷ், சாந்தாவின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ராசிபுரத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று பதுங்கிக் கொண்டார். காவல்துறையினர் தேடுகிறார்கள் என்பதை அறிந்த அவர், அங்கிருந்து தப்பிப்பதற்காக அத்தனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மே 21 ஆம் தேதி மாலையில், மல்லூர் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். சடலம் கிடந்த இடத்திற்குச் சில அடி தூரத்தில் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி ஒன்றையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.


மேலும், சம்பவ இடத்தில் ரமேஷ் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த நேரடி சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் காவல்துறையினர் பதிவு செய்திருக்கிறார்கள். காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், ''சாந்தா உயிருடன் இருந்திருந்தால் கூலிப்படை மூலம் என்னை நிச்சயமாக காலி செய்திருப்பார். அவர் இருக்கும் வரை எனக்கு நிம்மதியே கிடையாது. அதனால்தான் அவர் முந்திக்கொள்வதற்குள் நானே முந்திக்கொண்டு அவரை தீர்த்துக் கட்டிட்டேன்,'' என்று கூறியுள்ளார்.


என்றாலும், இச்சம்பவத்தில் மேலும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT