ADVERTISEMENT

சேலத்தில் கறிக்கடைக்காரரை தாக்கிய போலீஸ் எஸ்ஐக்கள் இருவர் இடமாற்றம்! 'முதியவரிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!'

08:33 PM Jan 14, 2019 | elayaraja

ADVERTISEMENT

சேலத்தை அடுத்த கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (75). இவர், அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார்.

ADVERTISEMENT


நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 13) என்பதால், கறிக்கடையில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு போலீஸ் ஜீப்பில் வந்த அன்னதானப்பட்டி சப்&இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி, வாகனத்தில் இருந்தபடியே, '2 கிலோ ஆட்டுக்கறி போடுடா...' என மரியாதைக்குறைவாகவும், அதிகார தொனியிலும் கேட்டார். அதற்கு மூக்குத்தி கவுண்டர், 'மரியாதையாக பேசுங்கள்' என்று கூறினார்.


இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்ஐ பாலசுப்ரமணி மற்றும் அவருடன் வந்த எஸ்எஸ்ஐ சிவபெருமாள் ஆகியோர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மூக்குத்திகவுண்டர் மற்றும் அவருடைய மனைவி பழனியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும், அந்த முதியவரை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த மூக்குத்தி கவுண்டரின் மகன் விஜயகுமார், போலீஸ் நிலையத்துக்கு சென்றார். எதற்காக எனது தந்தையை அடித்தீர்கள்? என கேட்டார். இதைக்கேட்ட அங்கிருந்த போலீசார் விஜயகுமாரையும் தாக்கியுள்ளனர். பிறகு, தந்தை, மகன் இருவரிடமும் ஒரு வெற்றுத்தாளில் கைரேகை வாங்கிக்கொண்டு போலீசார் அவர்களை விடுவித்தனர்.


போலீசார் தாக்கியதில் காயம் அடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கமிஷனர் விசாரணை நடத்தினார்.


கறிக்கடைக்காரரை தாக்கிய எஸ்ஐ பாலசுப்ரமணி, எஸ்எஸ்ஐ சிவபெருமாள் ஆகியோரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிட்டுள்ளார்.


இதற்கிடையே, தங்கள் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எஸ்ஐ பாலசுப்ரமணி, கறிக்கடைக்காரர் மூக்குத்திகவுண்டர், அவருடைய மனைவி பழனியம்மாள், மகன் விஜயகுமார் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டார். இது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT