ADVERTISEMENT

சேலம்: பாலியல் வழக்கில் சிக்கிய விசிக பிரமுகருக்கு 7 நாள் போலீஸ் காவல்!

11:25 PM Oct 11, 2019 | kalaimohan

சேலத்தில், ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகியை காவல்துறையினர் ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ ஓட்டுநர். அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் முன்னாள் செயலாளராக இருந்து வந்தார். இவர் ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு வரவழைத்து, அவரை தாக்கியும், மிரட்டியும் பாலியல் வல்லுறவு கொள்ளும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடந்த மாதம் பரவியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும், அவர் பல பெண்களை மிரட்டியே பாலியல் வல்லுறவு கொண்டதாகவும், அந்தக்காட்சிகளை வீடியோவாக படம் பிடித்து வைத்துக்கொண்டு, அதைக்காட்டி அச்சுறுத்தி குறிப்பிட்ட சில பெண்களுடன் அடிக்கடி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோமோசெக்ஸ் புகாரின்பேரில் மகுடஞ்சாவடி காவல்துறையினர் மோகன்ராஜை கைது செய்தனர்.

இதற்கிடையே, சமூக ஊடகங்களில் பரவிய ஆபாச வீடியோவில் பதிவு செய்யப்பட்ட சம்பவம், சேலம் மாநகர காவல்துறை எல்லைக்குள் நடந்ததால், அந்த வழக்கு மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் இருந்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மோகன்ராஜ் பாலியல் வல்லுறவு கொண்டதாக சொல்லப்பட்ட மேகலா (35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை தேடிப்பிடித்த காவல்துறையினர், அவரிடம் இருந்து எழுத்து மூலம் புகாரைப் பெற்றனர்.

அந்தப் புகாரில் மேகலா, ''நான் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தேன். என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதனால் குடும்பம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், வறுமை காரணமாக குடும்பச் செலவுகளுக்காக மோகன்ராஜிடம் 2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அந்தப்பணத்தை குறிப்பிட்ட தேதியில் தர முடியாமல் தாமதம் ஆனது. ஒருநாள் என்னை தன் வீட்டுக்கு அழைத்த மோகன்ராஜ், 2 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பித்தர தாமதம் ஆனதைச் சுட்டிக்காட்டி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை ஆபாசப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அந்த வீடியோவை பொதுவெளியில் பரப்பி விடுவேன் என்று சொல்லி அடிக்கடி என்னை மிரட்டி பாலியல் உறவு கொண்டார்,'' என்று கூறியிருந்தார்.

மேகலா அளித்த புகாரின்பேரில், மோகன்ராஜ் மீது பாலியல் வல்லுறவு, தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக பேசுதல் மற்றும் சைபர் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தது. ஏற்கனவே ஹோமோசெக்ஸ் புகாரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மோகன்ராஜை மேகலாவின் புகாரின்பேரிலும் கைது செய்தனர்.

இந்நிலையில்தான், அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி, சேலம் மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, வெள்ளிக்கிழமை (அக். 11) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் செந்தில்குமார், பாலியல் புகாரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மோகன்ராஜை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து மோகன்ராஜை காவலில் எடுத்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT