ADVERTISEMENT

''அரசு கொடுத்த தங்க காசை தாய் வீட்டில் தந்ததால் கர்ப்பிணி மனைவியை கொன்றேன்!''; கைதான கணவன் வாக்குமூலம்!

07:54 AM Dec 28, 2018 | elayaraja

ADVERTISEMENT

சேலம் அருகே, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கிய ஒரு பவுன் தங்கத்தை தாய் வீட்டில் தந்ததால், கர்ப்பிணி மனைவியை கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததாக கைதான கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆண்டிக்காட்டைச் சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகள் புவனேஸ்வரி (21). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் மகன் ராஜவேல் (22) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. புவனேஸ்வரி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார்.


திருமணத்தின்போது, தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ் புவனேஸ்வரி விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதியன்று, மாவட்ட சமூகநலத்துறை மூலமாக புவனேஸ்வரிக்கு தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ் ஒரு பவுன் தங்கக்காசு வழங்கப்பட்டது.


அந்த தங்கத்தை கணவர் வீட்டில் தராமல், தனது தாயிடம் சென்று கொடுத்தார் புவனேஸ்வரி. மனைவிக்கு கிடைக்கும் தங்கத்தை விற்று, புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்க திட்டமிட்டிருந்தார் ராஜவேல். இந்த நிலையில், மனைவி தனது தாயிடம் தங்கக்காசை கொடுத்ததோடு, அதை திருப்பி வாங்கி வர முடியாது என்றும் கூறியுள்ளார்.


இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, புவனேஸ்வரி வீட்டில் தூக்கில் சடலமாகத் கொங்கினார்.


திருமணம் ஆகி ஏழு ஆண்டுகளுக்குள் புதுப்பெண் மரணம் அடைந்ததால், கோட்டாட்சியர் விசாரணையும் நடந்தது. இதில், புவனேஸ்வரியை அவருடைய கணவர் ராஜவேலே கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்க விட்டிருப்பது தெரிய வந்தது. பிறகு ஒன்றும் தெரியாததுபோல் வயிற்று வலியால் தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தில் கூறி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை, கொலை வழக்காக ஜலகண்டாபுரம் போலீசார் பதிவு செய்து, ராஜவேலுவை கைது செய்தனர். மேற்கண்ட தகவல்களை ராஜவேல், காவல்துறையினரிடம் வாக்குமூலமாகவும் தெரிவித்துள்ளார்.


ஒரு பவுன் தங்கத்துக்காக கணவனே, மனைவியை கொடூரமாக கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT