ADVERTISEMENT

கரோனாவால் நலிவடைந்த பீங்கான் தொழில்... நவராத்திரி கொலு பொம்மைகளின் விற்பனை குறைவு! விரக்தியில் விருத்தாசலம் பீங்கான் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள்!

10:09 AM Oct 21, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 'கிளே' எனப்படும் 'வெள்ளை களிமண்' அதிக அளவில் கிடைப்பதால், அதனைக் கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், 1965ஆம் ஆண்டு விருத்தாசலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பீங்கான் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.

இப்பகுதியில், தமிழ்நாடு அரசு பீங்கான் உற்பத்தி நிறுவன நிர்வாகத்தின் கீழ் கற்குழாய் தொழிற்சாலை, பீங்கான் கலைப் பொருட்கள் உற்பத்திக் கூடம், செராமிக் மூலப் பொருட்கள் விற்பனை நிலையம், பீங்கான் பொருட்களைச் சூடேற்றும் கில்லன் உள்ளிட்ட பிரிவுகளும், 56 ஏக்கரில் 61 செராமிக் தொழிற்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தொழிற்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டீ கப், வாட்டர் ஃபில்டர், எலக்ட்ரிக் ஹீட்டர், சாமி சிலைகள், தலைவர் சிலைகள், பறவைகள், செடிகள், மரங்கள், பூக்கள், இயற்கைக் காட்சிப் பொருட்கள், வாஷ்பேசின், அகல் விளக்குகள், சானிட்டரி பொருட்கள் மற்றும் மின்சாரத் துறைக்குத் தேவையானப் ஃபியூஸ்கேரியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாகவும் பீங்கான் பொருட்களைத் தயாரித்து வருகின்றனர்.

மேலும் இதனைச் சார்ந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருவாய் ஈட்டி வருகின்றனர். இப்பகுதியில் தயாரிக்கப்படும் பீங்கான் பொருட்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு உத்தரவால் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 200க்கும் மேற்பட்ட குடிசைத் தொழிற்கூடங்களும் மூடப்பட்டு, பின்னர் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், தீபாவளி விளக்குகள், கார்த்திகை தீபம், கொலு பொம்மைகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட வேண்டும் என்றும், கரோனா தொற்று காலத்தால், நான்கு மாதங்களாக எவ்விதப் பணிகளும் செய்யாமல், தற்போது சிறு, குறு உற்பத்தியாளர்கள் முதல் பெரும் உற்பத்தியாளர்கள் வரை அனைவரும் வங்கி மற்றும் மகளிர் குழு உள்ளிட்டவைகளில் கடன் பெற்று அகல் விளக்கு மற்றும் கைவினைப் பொருட்களைத் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்துக் கட்டுப்பாட்டால் வெளிமாநில வியாபாரிகள் வராததால் பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாகவும், உற்பத்தியாளர்களின் பொருட்களை வாங்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும், விற்பனை குறைவாக நடைபெறுவதால் சிறு குறு உற்பத்தியாளர்கள் செய்யும் பொருட்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதால், பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் கூட, வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள், கடந்த 3 மாதமாக தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் விழாக்களுக்காகப் பயன்படுத்தப்படும், அகல் விளக்குகள் செய்யும் பணிக்கு வருகை தந்தாலும், மூலப்பொருட்கள் கொண்டு வருவதற்கான பிரச்சனைகள் மற்றும் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பொருட்களைக் காய வைப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுவதாக அப்பகுதி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கரோனா பரவல், மூலப்பொருட்களின் விலை, ஆட்களின் கூலி, வாடகை, மின்சார செலவு, பருவ மாற்றம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான செராமிக் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டது மட்டும் இல்லாமல், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து கடனை கட்டச் சொல்வதால் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசு நலிவடைந்த செராமிக் தொழில் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT