ADVERTISEMENT

ஜல்லிக்கட்டு காளை முட்டி காவலர் உயிரிழப்பு; குடும்பத்திற்கு ரூ. 8.40 லட்சம் நிதியுதவி

11:14 AM Jun 21, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது காளை முட்டி உயிரிழந்த போலிஸ்காரர் குடும்பத்திற்கு சக காவலர்கள் திரட்டிய நிதியை புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டே வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் கிராமத்தில் கடந்த மே மாதம் நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மீமிசல் போலிசார் நவநீதகிருஷ்ணனை வேகமாக வந்த காளை முட்டித் தூக்கி வீசிய சம்பவத்தில் நவநீதகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்த நிலையில் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே நவநீதகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் இறுதிச் சடங்கு நடத்துவதற்காக அவரது உடலை தூக்கிச் சென்று போலிஸ் மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர். இந்த நிலையில் சக போலிஸ்காரர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து ரூ. 8.40 லட்சம் சேர்த்து இன்று மாவட்ட எஸ்.பி மூலம் நவநீதகிருஷ்ணன் மனைவி சபரியிடம் வழங்கினார்கள். மேலும் சபரியும் காவலராக இருப்பதால் அவர் விரும்பிய இடத்திற்கு இடமாறுதல் உத்தரவையும் மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே வழங்கினார். சக போலிசாரின் கருணையுள்ள இந்த செயலை பலரும் பாராட்டுகின்றனர்.

மேலும் பல போலிசார் கூறும் போது, “மழைக்கால பேரிடர் மீட்புக்கு அமைப்பது போல அதற்கான பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு கவச உடையுடன் ‘ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழு’ என்ற குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு முடியும் வரை மாற்றுப்பணிகளுக்கு அனுப்பாமல் பாதுகாப்பு உபகரணங்களுடன் போலிசாரை பாதுகாப்பு பணிகளுக்கு அனுப்பினால் இது போன்ற உயிரிழப்புகளை தவிர்க்கலாம். இதற்காக தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT