Skip to main content

தொடரும் தீண்டாமை... புதுக்கோட்டையில் அரங்கேறும் அவலம்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

Two More Arrested in Pudukkottai Caste Issue

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர் மலம் கழித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளனூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதனைத் தொடர்ந்து,  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த பட்டியலின மக்களுக்கு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் அங்குள்ள அய்யனார் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே ஆட்சியர் கவிதா ராமு பட்டியலின மக்களை அய்யனார் கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்தனர். இதற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. 

 

இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் அதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பொம்மாடிமலை அருகே உள்ள தொடையூரைச் சேர்ந்த பைரவவிஷ்ணு புத்தாண்டையொட்டி கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அப்போது, அந்த வழியாகச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த 30 வயதான சரத் மற்றும் 27 வயதான கமல்ஹாசன்  ஆகியோர் கேக் வெட்டிய பைரவவிஷ்ணுவிடம் தகராறு செய்து, அவர்களின் சமூகத்தின் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பைரவவிஷ்ணு கொடுத்த புகாரின் பெயரில் வெள்ளணுர் போலீசார் இருவர் மீதும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்