ADVERTISEMENT

அரிக்கொம்பன் யானை தாக்கி உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

11:28 PM May 30, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் கடந்த 27ம் தேதி புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் தனியார் நிறுவன காவலாளி பால்ராஜ் படுகாயம் அடைந்தார். தலை மற்றும் வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் பால்ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இறந்த பால்ராஜின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி பிரேதப் பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்ட இறந்த பால்ராஜின் உடலுக்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் பால்ராஜின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் வழங்கப்பட்ட ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் பால்ராஜ் குடும்பத்தினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பால்ராஜின் குடும்பத்தினர் தங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கிடையே யானை தாக்கி உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த தொகையும் பால்ராஜின் குடும்பத்திற்கு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்தார்.

ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேனி வடக்கு மாவட்டச் செயலாளருமான தங்கதமிழ்ச்செல்வன் உட்பட கட்சி பொறுப்பாளர்களும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT