
திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்க விழா சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் கமலக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோ ரஞ்சிதம், ஆத்தூர் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, சின்னாளப்பட்டி பேரூராட்சி தலைவர் பிரதீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட 1676 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் வங்கிக்கான ஏ.டி.எம். கார்டுகளை வழங்கிவிட்டு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார். அவர் பேசுகையில், ''தமிழகத்தில் இந்நாள் ஒரு பொன்னான நாளாகும். காரணம் கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று கலைஞர் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மகளிருக்காக அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணம் செயல்படுத்தும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உலகமே போற்றும் ஒப்பற்ற திட்டமாகும். காரணம், கலைஞர் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டத்தை இயற்றினார். அதன்மூலம் பெண்களுக்கு சரி சமம் என்ற நிலை உருவானது. அதற்கு முன்பாகவே தொலைநோக்குப் பார்வையோடு குடிசைகளை ஒழித்து வீடுகளைக் கொண்டுவந்தார். பெண்களுக்கு இலவச எரிவாயு அடுப்பு வழங்குதல், கலர் டிவி, பெண்கள் சொந்த காலில் நிற்பதற்காக சுய உதவி குழுக்களை உருவாக்கியதோடு அவர்களுக்கு கடன் உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி, உட்பட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியதால் தமிழகத்தில் பெண் இனம் முன்னேற்றம் கண்டது.

தமிழகத்தில் உள்ள 8 கோடி பேர்களில் சுமார் 2 கோடியே 10 லட்சம் பேர் குடும்ப அட்டை வைத்துள்ளார்கள். அவர்களில் தகுதியானவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை பயனுள்ளதாக உள்ளது. இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த திட்டம் செயல்படப் போகிறது. நிதி ஆதாரத்தை பற்றிக் கவலைப்படாமல் பெண் இனத்தின் முன்னேற்றத்திற்காக திராவிட மாடல் ஆட்சி நாயகன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்தை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே செயல்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. அடித்தட்டு மக்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமடைய நலத்திட்டங்களை வாரி வாரி வழங்கி வருவது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்தலைமையிலான மக்களுக்கான அரசு என்பதோடு, தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்திற்கு கல்வி, அரசுப் பணி, உட்படப் பல நலத்திட்டங்களை சிறப்போடு செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்புகழ் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)